ADDED : மார் 31, 2024 12:01 AM

புதுடில்லி: எதிர்க்கட்சியினரின், 'இண்டியா' கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு பெரும் பிரச்னையாகியுள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சி, காங்கிரசை கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்டது; இது காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் போட்டியிட விரும்பிய தொகுதிகளில், உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிடும் என்ற அறிவிப்பு, மஹாராஷ்டிரா காங்., தலைவர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 'இந்த தொகுதிகளை விட்டு கொடுக்கக் கூடாது; நாம் நிச்சயம் போட்டியிட வேண்டும்' என, டில்லியில் ராகுலை சந்தித்து வற்புறுத்தி வருகின்றனர், காங்., தலைவர்கள்.
'இதனால், மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே காங்., கூட்டணியில் இருந்தாலும், உத்தவ் வேட்பாளர்களுக்கு எதிராக, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவர்' என்கின்றனர் காங்கிரசார். 'இது ஒரு நட்பான போட்டியாக கருத வேண்டும்' என்கின்றனர் காங்கிரசார்.
சாங்லி, பிவாண்டி உட்பட சில தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் கூட்டணிக்கு எதிராக களம் இறக்கப்படுவராம். 'இது பா.ஜ.,விற்கு சாதகமாக போய்விடுமே' என்றால், 'எங்கள் மரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது' என, பதில் வருகிறது.
கூட்டணிக்குள் பிரச்னை ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் காங்கிரஸ் தலைவர்கள் பலர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.
முன்னாள் லோக்சபா சபாநாயகரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான, சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.
சிவ்ராஜ் பாட்டீலுக்கு நெருக்கமான, பசவராஜ் பாட்டீல் கடந்த மாதம் பா.ஜ.,வில் சேர்ந்தார். லிங்காயத் சமூகத்தைச் சார்ந்த பாட்டீல், மஹாராஷ்டிராவின் லாட்டூர், நாந்தீத் பகுதிகளில் பிரபலமானவர்.
அத்துடன், கர்நாடக - மஹாராஷ்டிரா எல்லை தொகுதிகளிலும், லிங்காயத் ஓட்டுகள் பா.ஜ.,விற்கு கிடைக்க வாய்ப்புண்டு என, கட்சி கருதுகிறது.

