UPDATED : ஜூன் 27, 2024 07:03 AM
ADDED : ஜூன் 27, 2024 06:36 AM

மேற்கு தொடர்ச்சி மலையில், 1,525 மீட்டர் உயரத்தில் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் குடகு அமைந்துள்ளது.
வரலாற்றின்படி, க்ரோததேசம் என்பது தான் பின்னாளில் 'கொடவா' என மாறியது. இங்கு, கொடவா பழங்குடியினர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
குடகை, 9, 10ம் நுாற்றாண்டுகளில் கங்க மன்னர்களும்; 11ம் நுாற்றாண்டில் சோழர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது. அதை தொடர்ந்து ஹொய்சாளர்கள் ஆட்சி செய்தனர். 1834ல் ஆங்கிலேயர்கள் இப்பகுதியை கைப்பற்றும் வரை, 'ஹலேரி ராஜாவின்' ஆட்சியின் கீழ் இருந்தது. 1956ல் கர்நாடகாவுடன் இணையும் முன், குடகு தனி மாநிலமாக இருந்தது.
அதிக மழை
இந்தியாவில் காபி உற்பத்தியில் குடகு முதலிடத்தில் உள்ளது. அத்துடன் நாட்டில் அதிக மழை பெய்யும் இடங்களில் இதுவும் ஒன்று.
இம்மாவட்டத்தில், கொடவா, துளு, கவுடா போன்ற பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் கொடவா சமூகம், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரியளவில் உள்ளனர்.
இங்கு ராஜா சீட், அபே நீர்வீழ்ச்சி, பால்வார் நீர்வீழ்ச்சி, ஓம்காரேஸ்வரா கோவில், பைலகுப்பா, தலை காவேரி, துபாரே யானைகள் முகாம் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இருப்பதால், தலை காவேரி, புஷ்பகிரி, பிரம்மகிரி என மூன்று சரணலாயங்கள், நாகரஹொளே தேசிய பூங்கா உள்ளன. இந்த வன விலங்குகளில், யானைகள், புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை உள்ளன.
தண்டியண்டமோல், பிரம்மகிரி, புஷ்பகிரி போன்ற மலை சிகரங்களில் ஏற குடகு பிரபலமானது. மடிகேரியில் துபாரே யானைகள் முகாம் அமைந்து உள்ளது. இங்கு யானை சவாரி, ஆற்று நீரில் 'படகு ராப்டிங்' செய்யலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள் மைசூரு அல்லது மங்களூருக்கு செல்லலாம். ரயிலில் செல்பவர்கள், மங்களூரு ஜங்ஷன், மைசூரு ஜங்ஷனில் இறங்கி, அங்கிருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், தனியார் பஸ்களில் மடிகேரி செல்லலாம்.
- நமது நிருபர் -