UPDATED : ஆக 13, 2024 03:36 AM
ADDED : ஆக 13, 2024 03:03 AM

சென்னை: அரசு இ - சேவை மையங்களுக்கு செல்வோரிடம், இடைத்தரகர்கள் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டச் சேவைகளை, 'ஆன்லைன்' வாயிலாக பெற, தமிழக மின்னாளுமை முகமை, தமிழக கேபிள், 'டிவி' நிறுவனம் ஆகியவை, அரசு இ - சேவை மையங்களை நடத்துகின்றன.
பிறப்பு, இறப்பு சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். அனைத்து சேவைகளுக்கும் தலா, 60 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மையத்தில் தரப்படும் விண்ணப்பத்தை, துறை அதிகாரிகள் பரிசீலித்து சான்று வழங்குவர்.
இந்நிலையில், பெரும்பாலான இ - சேவை மையங்கள் இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறியதாவது:
தந்தை இறந்த சில நாட்களில் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க, இ - சேவை மையம் சென்றேன். அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை 'ஸ்கேன்' செய்து பதிவேற்றம் செய்துவிட்டு, 60 ரூபாய் செலுத்தினேன்.
ஒரு வாரத்தில் சான்று கிடைக்கும் என்று தெரிவித்தனர். ஆனால், இரு வாரங்களாகியும் சான்று கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று விசாரித்தாலும், முறையான பதில் தரவில்லை. மறுமுறை விண்ணப்பித்தும் விண்ணப்பம் ரத்தானது.
ஆனால், இ - சேவை மையத்தில் உள்ள இடைத்தரகர், 'நேரடியாக தாசில்தாரிடம் பேசி சான்று வாங்கி தருகிறோம்; 1,500 ரூபாய் செலவாகும்; ஓரிரு நாட்களில் கிடைக்கும்' என்றார். வேறு வழி இல்லாமல் அவரிடம் பணம் தந்தேன். அடுத்த மூன்று நாட்களில் சான்று கிடைத்து விட்டது.
அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் பணம் பெற்று சான்று வழங்கி வந்தனர்; இப்போது இடைத்தரகர்கள், இ - சேவை மையங்களுக்கும் வந்து விட்டனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.