டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' பட்நாயக்கின் அரசியல் முடிந்து விட்டதா?
டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' பட்நாயக்கின் அரசியல் முடிந்து விட்டதா?
UPDATED : ஜூன் 23, 2024 04:39 AM
ADDED : ஜூன் 23, 2024 04:09 AM

கடந்த,
24 ஆண்டுகளாக ஒடிசாவின் முடிசூடா மன்னராக முதல்வர் பதவியில் இருந்தவர்,
நவீன் பட்நாயக். ஆனால், இந்த முறை சட்டசபை தேர்தலில் நவீனின் பிஜு ஜனதா
தளம் தோல்வியடைந்தது. முதன் முறையாக பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்து
விட்டது.
'நவீனுக்கு உடல்நிலை சரியில்லை' எனவும் பேச்சு அடிபடும்
நிலையில், இனிமேல் பிஜு ஜனதா தளத்தின் எதிர்காலம் என்ன... கதை முடிந்து
விட்டதா என்றால், 'இல்லை; இனிமேல் தான் அரசியல் ஆரம்பம்' என்கின்றனர்,
கட்சி தலைவர்கள்.
'நான்கு கோடி ஒடிசா மக்களால் விரும்பப்படும்,
நவீன் பாபு அரசியலை விட்டு ஒதுங்க மாட்டார்; சரியான நேரத்திற்காக
காத்திருக்கிறார்' என சொல்லப்படுகிறது. 'கட்சியை ஒன்றாக வைத்திருப்பது,
பலப்படுத்த திட்டங்களை வகுப்பது, பா.ஜ.,வை எதிர்கொள்ள என்ன செய்வது என்பது
குறித்த ஆலோசனைகள்' என, பலவற்றையும் ஆலோசனை செய்து வருகிறாராம், நவீன்
பட்நாயக். இதனால் தான், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக
பொறுப்பேற்றுள்ளாராம்.
ஐந்து முறை முதல்வராக பணியாற்றிய நவீன், எந்த
ஒரு தேர்தலிலும் தோல்வி அடையாதவர். 'விரைவில், இவருக்கு அடுத்தபடியாக
கட்சியில் யார் என்பதை இவர் தேர்ந்தெடுக்க வேண்டும்; அத்துடன், இரண்டாம்
கட்ட தலைவர்களையும் உருவாக்க வேண்டும்' என, கட்சியினர் விரும்புகின்றனராம்.