ஈரோடு கிழக்கை விட்டு கொடுத்ததால் சிக்கல்: செல்வப்பெருந்தகை பதவிக்கு வேட்டு?
ஈரோடு கிழக்கை விட்டு கொடுத்ததால் சிக்கல்: செல்வப்பெருந்தகை பதவிக்கு வேட்டு?
ADDED : பிப் 15, 2025 03:04 AM

பல்வேறு மாநிலங்களில், தலைவர் பதவிகளுக்கு புதிய நபர்களை நியமிக்கும் நடவடிக்கையை, காங்கிரஸ் மேலிடம் துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் பதவியிலும் மாற்றம் செய்வது குறித்த பரிசீலனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், கணிசமான வெற்றியை வெற்ற காங்கிரஸ், அதன்பின், அந்த வெற்றிப் பாதையை தக்கவைத்துக்கொள்ளத் தவறி விட்டது.
கலைப்பு
அடுத்தடுத்து வந்த, ஒடிசா, ஹரியானா, மஹாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் வெற்றியை தவறவிட்டு விட்டு, கடைசியாக டில்லி சட்டசபை தேர்தலிலும், படுதோல்வியை சந்தித்து, மிகவும் துவண்டு போயுள்ளது.
இந்த நிலையில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்ட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களாகவே,மாநில தலைவர்கள் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பின், ஒடிசா சரத் பட்நாயக் தலைமையில் இருந்த கட்சியின் ஒட்டுமொத்த அமைப்புமே கலைக்கப்பட்டது.இந்நிலையில், அங்கு மாநிலத் தலைவராக பக்த சரண்தாஸ் நியமிக்கப்பட்டுஉள்ளார். அதேபோல, மஹாராஷ்டிராவிலும் நானோ படோல் நீக்கப்பட்டு, புதிய மாநில தலைவராக ஹர்ஷ்வர்த்தன் சப்கால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வரிசையில், அடுத்தடுத்து சில மாநிலங்களில், தலைவர் பதவிகளில், ஏற்கனவே இருப்பவர்களை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதில், தமிழகமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், செல்வப்பெருந்தகை பதவி நிலைக்குமா என தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு காங்., விட்டுக்கொடுத்ததோடு, அத்தொகுதியில் தி.மு.க., எளிதாக வெற்றி பெற்றுள்ளதால், அத்தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டிருக்கலாம் என, மேலிடத்துக்கு சொல்லப்பட்டுள்ளது.
இதையடுத்தே, தமிழக காங்., தலைமை செயல்பாடுகள் குறித்து, கட்சியின் மேலிடத்துக்கு மாற்று யோசனை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் தேர்தலை புறக்கணித்த நிலையில், தி.மு.க., கூட்டணி சார்பில் காங்., அங்கே போட்டியிட்டிருந்தாலும் எளிய வெற்றியே கிடைத்திருக்கும் என்ற தகவலை, தமிழக காங்.,கில் இருந்து சிலர், மேலிடத்துக்கு எடுத்துச் சொல்லி உள்ளனர்.
புது தலைவர் யார்?
இந்த விஷயத்தில், தமிழக காங்., தலைமை தன்னிச்சையாக முடிவெடுத்து, காங்., தொகுதியை தி.மு.க.,வுக்கு தாரை வார்த்தது தேவையில்லாதது என்ற தகவலையும் மேலிடத்திடம் சொல்லி உள்ளனர்.
இதையடுத்தே, தமிழக காங்., தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகையை மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமிக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகையை மாற்றும்பட்சத்தில், அதே இனத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., விசுவநாதன் அல்லது திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்திலை புதிய தலைவராக நியமிக்கலாம் என்றும் தலைமைக்கு சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.
இதற்கிடையில், தலைமை மாற்றம் குறித்த தகவல் வெளியே பரவியதை அடுத்து, தலைவர் பதவியை பிடிக்க, கார்த்தி, ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.,க்கள் சிலரும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கி உள்ளதாக காங்., வட்டாரங்கள் கூறின.

