ராஜ்யசபாவில் ஆதரவு வேண்டாமா? பா.ஜ.,வுக்கு ஜெகன் எச்சரிக்கை
ராஜ்யசபாவில் ஆதரவு வேண்டாமா? பா.ஜ.,வுக்கு ஜெகன் எச்சரிக்கை
UPDATED : ஜூன் 14, 2024 05:25 AM
ADDED : ஜூன் 14, 2024 01:31 AM

'லோக்சபாவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு பா.ஜ.,வுக்கு எவ்வளவு முக்கியமோ, ராஜ்யசபாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் அதே அளவு முக்கியம்' என, ஒய்.எஸ்.ஆர். காங்., தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், தெலுங்கு தேசம் - ஜன சேனா - பா.ஜ., கூட்டணி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாள் முதல், ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களிலும் தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர்.காங்., தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் அரங்கேறி வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணும்படியும் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
அப்போது, ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் ராஜ்யசபா குழு தலைவர் விஜய் சாய் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபாவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.,க்கள் உள்ளனர். சபையில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தெலுங்கு தேசம் கட்சியை பா.ஜ., முழுமையாக நம்பிஉள்ளது.
அதே நேரம், ராஜ்யசபாவில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற எங்கள் ஆதரவும் பா.ஜ.,வுக்கு தேவை என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. இங்கு நாங்கள் கணிசமான எம்.பி.,க்களை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்யசபாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.பி.,க்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக, ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சி பா.ஜ.,வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -