UPDATED : ஏப் 10, 2024 03:54 AM
ADDED : ஏப் 10, 2024 01:08 AM

டில்லியில் ஜனாதிபதி மாளிகை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அந்த கட்டடத்தில்தான், தற்போது வரையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
அதேசமயம், மவுலானா ஆசாத் சாலையில் உள்ள, 6ம் எண் கொண்ட பங்களா தான் துணை ஜனாதிபதியின் இல்லம் மற்றும் செயலகமாக, 1962 முதல் செயல்பட்டு வந்தது.
புதிய பார்லிமென்ட் கட்டுமானம் உள்ளிட்ட, 'சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தின் கீழ் துணை ஜனாதிபதியின் இல்லம் துரிதகதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தனி செயலகம்
ஜனாதிபதி மாளிகையின் நார்த் பிளாக் அருகே, இந்த புதிய பங்களா உருவாகியுள்ளது. மொத்தம் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இங்கு, துணை ஜனாதிபதி குடியிருக்கும் இல்லம் மற்றும் அவருக்கென தனி செயலகம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
மொத்தம் 300 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த பங்களாவில் விருந்தினர் இல்லம், பணியாளர்களுக்கான குடியிருப்பு, மலர் தோட்டம், செயற்கை நீரூற்றுகள் ஆகிய வையும் இடம்பெற்றுள்ளன.
இதில், கருத்தரங்குகளை நடத்தும் வகையில் உள்ளரங்க கட்டடங்கள் மற்றும் நீச்சல் குளம், விளையாட்டு அரங்கு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
நல்லநாள் என்பதால், கடந்த பிப்ரவரி 14 அன்றே பூஜைகள் மற்றும் பால் காய்ச்சும் நிகழ்ச்சியை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குடும்பத்தினர் நடத்தி விட்டனர்.
ஆனாலும், இது வெளியில் சொல்லப்படவில்லை.
தொடர்ச்சியாக சிறு சிறு வேலைகள் இருந்த காரணத்தால், குடியேறுவது தாமதமான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தன் பழைய இல்லத்திலிருந்து இந்த புதிய பங்களாவுக்கு குடியேறினார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்பட வில்லை. ஆனாலும், அவரது பழைய பங்களாவிலிருந்து பொருட்கள் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டதை அறிந்த பிறகே இந்த விஷயம் வெளியில் தெரிந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் நேற்று, துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா செயலகத்தின் முகவரியும் அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இனிமேல், 'நம்பர் 108, சர்ச் சாலை' என்ற முகவரியில், துணை ஜனாதிபதியின் இல்லம் மற்றும் செயலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
- நமது டில்லி நிருபர் -

