காஞ்சி ராணி என் தாய்; நான் தமிழகத்தின் மகன்; தர்மேந்திர பிரதான் மீண்டும் காரசாரம்
காஞ்சி ராணி என் தாய்; நான் தமிழகத்தின் மகன்; தர்மேந்திர பிரதான் மீண்டும் காரசாரம்
ADDED : மார் 12, 2025 04:52 AM

தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்குவது தொடர்பாக நேற்று முன்தினம் லோக்சபாவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
தர்மேந்திர பிரதானை கண்டித்து தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஜ்யசபாவில் நேற்று, தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
ஒடிசாவில் பகவான் புரி ஜெகன்நாதர் எல்லாவற்றுக்கும் மேலானவர். ஒடியா மக்களாகிய எங்கள் அனைவருக்குமே புரியின் மன்னர் என்பவர், ஒரு வாழும் கடவுள்.
சகோதரிகள் தான்
அப்படிப்பட்ட எங்களது மன்னர், யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா? தமிழகத்தின் காஞ்சிபுரத்து ராணியைத் தான். எனவே, என் தாயார் தமிழகத்திலிருந்து வந்தவர். அந்த வகையில் நானும் தமிழகத்தின் மகன்.
கடந்த இரண்டு நாட்களாக, ஒரு பிரச்னை போய்க் கொண்டிருக்கிறது. ராஜ்யபாவில் உள்ள கனிமொழியும் சரி, லோக்பாவில் உள்ள இன்னொரு கனிமொழியும் சரி; இருவருமே என் சகோதரிகள் தான்.
நான் ஒரு ஒடிசாக்காரன். அங்குள்ள கடவுள் ஜெகன்நாதரின் பக்தன். எங்களது கலாசாரத்தின்படி, அம்மா, சகோதரி ஆகியோர், அனைவரையும் விட மிகவும் உயர்ந்தவர்கள்.
என் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், மீண்டும் மன்னிப்புக் கேட்கிறேன். ஒருமுறை அல்ல; 100 முறைகூட மன்னிப்பு கேட்கிறேன். இதில், எனக்கு எந்தவித சங்கடமும் இல்லை.
அதேசமயம், பி.எம்.ஸ்ரீ திட்ட விவகாரத்தில், உண்மையை நேருக்கு நேராக சந்தித்தே ஆக வேண்டும். 13 முறை, தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின், கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ஆகியோருடன், நானும், என் அமைச்சகமும் தகவல் தொடர்பு கொண்டுள்ளோம்.
தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா எழுதிய கடிதத்தில், 'பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைவதற்கு, நாங்கள் மிகவும் விருப்பமாக உள்ளோம். பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை, தமிழகத்தில் துவங்குவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஆர்வமாக உள்ளோம்.
வாய்ப்பை கெடுக்காதீர்
'இது தொடர்பாக குழு அமைத்து, அது அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், கையெழுத்திட தயாராக உள்ளோம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது; இத்தனையும் நடந்த பின், இன்று மறுக்கின்றனர். அதை எப்படி செய்கின்றனர் என புரியவில்லை.
அதேநேரம், பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று, யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். தமிழக சட்டசபையில், ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை யாரும் மறந்துவிடவில்லை.
அப்படிப்பட்டவர்கள், எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். தமிழுக்கு ஆதரவானவர்கள் நாங்கள். அதற்கு யாரும் எங்களுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டாம்.
இந்த விவகாரத்தில் தமிழக எம்.பி.,க்கள் என்னை திட்டுங்கள். தனிப்பட்ட முறையில் இழிவான வார்த்தைகளை வீசுங்கள்; கவலையில்லை. வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே எங்கள் இலக்கு. தமிழகம் இந்தியாவின் அங்கம். தமிழகத்தை முன்னேற்றுதே எங்களுக்கான பொறுப்பு.
என்னை முட்டாள் என நீங்கள் இப்போது கூறலாம். ஆனால், காலம் காலமாக தமிழக மக்களை முட்டாளாக்க, இனியும் உங்களால் முடியாது. என்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை. ஆனால், தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பை கெடுக்காதீர்கள்.
இவ்வாறு பேசினார்.
- நமது டில்லி நிருபர் -