sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பெரியாற்றில் பழைய அணையை இடித்து புதிய அணை கட்ட கேரள அரசு விண்ணப்பம்

/

பெரியாற்றில் பழைய அணையை இடித்து புதிய அணை கட்ட கேரள அரசு விண்ணப்பம்

பெரியாற்றில் பழைய அணையை இடித்து புதிய அணை கட்ட கேரள அரசு விண்ணப்பம்

பெரியாற்றில் பழைய அணையை இடித்து புதிய அணை கட்ட கேரள அரசு விண்ணப்பம்

2


ADDED : மே 24, 2024 05:16 AM

Google News

ADDED : மே 24, 2024 05:16 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை1886ல் கட்டப்பட்டது. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 999 ஆண்டுகளுக்கு அணையை பராமரித்து நிர்வகிக்கும் குத்தகை தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. அணையின் ஸ்திரத்தன்மை குறித்து கேரள அரசு கேள்வி எழுப்பியதை அடுத்து அணையின் பாதுகாப்பை மதிப்பிட, நிபுணர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

அணையை ஆய்வு செய்த நிபுணர் குழு, அணை பாதுகாப்புடன் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, முல்லை பெரியாறு அணையில், தமிழகம் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க, உச்ச நீதிமன்றம் 2014ல் அனுமதி அளித்தது. அணையை பலப்படுத்திய பின், 152 அடி வரை நீரை தேக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து கீழ்நோக்கி 1,200 அடி தொலைவில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடும்படி மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்தது. கேரள அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த விண்ணப்பம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் கடந்த ஜனவரியில் அளிக்கப்பட்டது. அதன் விபரம்:

முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தற்போதுள்ள அணைக்கு 1,200 அடி கீழே புதிய அணையை கட்டிய பின், பழைய அணையை இடிக்க அனுமதி கோருகிறோம்.

புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்னும், தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின்படி தடையின்றி தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஆய்வு செய்த அமைச்சகம், நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு மே 14ல் அனுப்பியது. இது தொடர்பான கூட்டத்தை மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு வரும் 28ல் நடத்த உள்ளது.

தற்போதுள்ள முல்லை பெரியாறு அணையும், புதிதாக கட்ட திட்டமிட்டுள்ள அணையும் மத்திய அரசின் புலிகள் சரணாலய பகுதியில் வருவதால் அணையை இடிப்பதற்கோ, புதிதாக கட்டுவதற்கோ மத்திய அரசின் பல ஒப்புதல்களை பெற வேண்டும். குறிப்பாக சுற்றுச்சூழல் துறை அனுமதி மிக அவசியம்.

புதிய அணை கட்டுவதற்கு தமிழகம், கேரளாவிற்கிடையே இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது கவனிக்கத்தக்கது.

விரைவில் நடவடிக்கை:


சிலந்தி ஆறு தடுப்பணை, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களை தமிழக அரசு கவனமாக ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கும்; நடவடிக்கை எடுக்கும். அது என்ன நடவடிக்கை என்பது விரைவில் தெரியும்.

- சுப்பிரமணியன்,

தமிழக பன்மாநில நதிகள் பிரிவு தலைவர்

தமிழகத்துக்கு எதிரான சதி!

புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: இது, தமிழகத்திற்கு எதிரான சதித் திட்டம். கேரள அரசின் விண்ணப்பத்தை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் துவக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யாமல், நிபுணர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளது தவறு. இது, 2014ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் செயல்.உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அணையை பல முறை ஆய்வு செய்து, அது மிகவும் உறுதியாக இருப்பதாக சான்றளித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த விடாமல் தடுக்கும் உள்நோக்கத்துடன் தான், கேரள அரசு இவ்வாறு செயல்படுகிறது. கேரள அரசின் இந்த சதித் திட்டத்தை புரிந்து, முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு தொடர்பான கோரிக்கையை, மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கூட்டணிக்காக வாய் திறக்காத தி.மு.க.,


புதிய அணை திட்டம் குறித்து தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:
ராமன், மாநில கவுரவ தலைவர், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு: ஒவ்வொரு முறை கேரள அரசு பிரச்னை செய்யும் போது மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்காக ஒருமாத கால பிரசார பயணம் மேற்கொண்ட பின் கேரள அரசு பின்வாங்கியது. தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி இருப்பதால் மதுரை எம்.பி., வெங்கடேசன் இதுபற்றி பேசுவது இல்லை. மாநில அரசு இதை தடுத்து நிறுத்தாவிட்டால் தேர்தல் முடிவுக்கு முன்பாகவே விவசாயிகள் வீதியில் இறங்கி போராடுவோம். மேற்குத்தொடர்ச்சி மலையில் அதிகப்படியான மழைபெய்தும் முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 112 அடியில் இருந்து 116 அடியாக தான் உள்ளது. தண்ணீரை மடைமாற்றம் செய்கின்றனரா, அணைக்கு வராமல் கடலுக்கு திசை திருப்புகின்றனரா என சந்தேகம் வருகிறது.
பெருமாள், தேசிய துணைத்தலைவர், பாரதிய கிசான் சங்கம்: கம்பம் பள்ளத்தாக்கு முழுக்க முல்லை பெரியாறு பாசனம் தான். அதற்கு கீழே வைகை அணை. கடமலைக்குன்று மூலவைகையில் இருந்து மலையில் பெய்யும் தண்ணீர், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் என வைகை அணைக்கு நீர்வரத்து கிடைக்கிறது. குறைந்தது 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுவதால் 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார உரிமையாக உள்ளது. வல்லுநர் குழு மூலம் அணையின் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்து போதிய பலத்துடன் உள்ளதென சான்றிதழ் அளிக்கப்பட்டது. மாற்று அணை தேவையில்லை எனவும் மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இரு மாநிலங்களுக்கும் நீர்ப்பங்கீட்டில் உரிமை உள்ளது என்பதால் இருமாநில அரசும் சம்மதம் தர வேண்டும். கேரளாவின் வேறெந்த பகுதியிலும்அணை கட்டலாம். லோக்சபா தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி புதிய அணை கட்டமுடியாது.
அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறுவைகை பாசன விவசாயிகள் சங்கம்: புதிய அணை கட்ட இருப்பதாக கேரளா சொல்லும் மஞ்சுமலை பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்துவதற்கு ஏற்கனவே கேரள மாநில அரசு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இப்போது முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப் போவதாக மத்திய அரசை அணுகி இருப்பது வேடிக்கையானது. முல்லை பெரியாறு அணைக்கு 999 ஆண்டு கால குத்தகை மரபு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளும் தமிழகத்திற்கு உள்ளேதான் இருக்கிறது. கேரளாவில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரை தடுப்பணைகளின் மூலம் வண்டிப்பெரியாறு வழியே இடுக்கி அணைக்கு பல ஆண்டுகளாக திருப்பி அனுப்புகின்றனர். குத்தகை காலம் முடிவதற்கு பல நுாறு ஆண்டுகள் இருக்கும் நிலையில் அணையின் மீது கேரளா கை வைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Image 1272939

சதீஷ்பாபு, தேனி மாவட்டத் தலைவர், பாரதிய கிசான் சங்கம்: 1979ல் துவங்கிய முல்லை பெரியாறு அணை பிரச்னை அரசியல்வாதிகளிடம் சிக்கி இதுவரை முடிவுக்கு வரவில்லை. அணை பலவீனம் அடைந்து விட்டது என முதலில் கேரளா கூறியதற்குப்பின் அணை பலப்படுத்தப்பட்டது. நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்த பின் அணை பலமாக உள்ளது என்பதால் 142 அடி வரையும் பேபிஅணையை பலப்படுத்திய பின் 152 அடியாக உயர்த்தலாம் எனவும் 2014ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் 142 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரளா பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. கேரளா புதிய அணை கட்டு வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அணை கட்டுமான பணிக்கு லாயக்கற்றது என ஏற்கனவே அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் மீண்டும் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பது போல் மாயை உருவாக்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us