நேரு கோட் பழங்கதை; மோடி பிளாஸ்டிக் வேஸ்ட் பாட்டில் கோட் நிகழ்கதை!
நேரு கோட் பழங்கதை; மோடி பிளாஸ்டிக் வேஸ்ட் பாட்டில் கோட் நிகழ்கதை!
UPDATED : ஏப் 13, 2024 07:04 AM
ADDED : ஏப் 13, 2024 12:23 AM

'நியூஸ்வீக்'
இதழின் சி.இ.ஓ., தேவ் பிரகட், க்ளோபல் சீப் எடிட்டர் நான்சி கூப்பர்,
எடிட்டோரியல் டைரக்டர் டேனிஷ் மன்சூர் பட் மூவரும் 90 நிமிடம் மோடியுடன்
உரையாடினர்.
“இதைத்
தொடுங்களேன்” என்று மோடி சொன்னதும் திகைப்பு. தான் அணிந்திருந்த நீல நிற
மேலாடையைக் காட்டினார் மோடி. இப்போது மோடி ஜாக்கெட் என்ற பெயரால் வட
இந்தியாவில் பிரபலமாகி விட்ட ஆண்களின் மேலாடை அது. நான்சி தொட்டுப்
பார்த்தார். “இது என்ன மெட்டீரியல் என்று சொல்லுங்கள், பார்ப்போம்” என்றார்
பிரதமர்.
“சில்க் என்று நினைக்கிறேன்” இது நான்சி.
கடகடவென்று
சிரித்தார் மோடி. “இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். நான் விலை
உயர்ந்த ஆடம்பரமான உடை அணிபவன் என்று. உண்மையில் இது நீங்கள் தண்ணீர்
குடித்து விட்டு துாக்கி எறிந்த பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு
நெய்யப்பட்ட ஜாக்கெட்” என்று விளக்கினார்.
இதுவரை இந்தியாவின் முதல்
பிரதமர் அணிந்து பிரபலமான நேரு கோட், இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக
இருந்தது. அது முடிந்து மோடி ஜாக்கெட் காலம் துவங்கி விட்டது நன்றாகவே
தெரிகிறது என்று இந்தியாவின் மாற்றத்தை கோடிட்டுக் காட்டுகிறார்
டி.எம்.பட்.
எந்த பிரதமருக்கும் இல்லாத அளவில், வெளிநாட்டு இந்தியர்கள் மத்தியில் உங்களுக்கு அமோக ஆதரவு நிலவ காரணம் என்ன?
வெளிநாட்டு இந்தியர்களுடன் எனக்கு இருக்கும் தொடர்பு இன்று நேற்று உருவானதல்ல. நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அவர்களோடு உறவு இருந்தது. அப்போது நான் சமூகப்பணி மட்டும் செய்து வந்தேன். அமெரிக்காவுக்கு வந்த போது, 29 மாகாணங்களில் சுற்றி இருக்கிறேன். அங்குள்ள இந்தியர்களை சந்தித்து பழகி இருக்கிறேன்.
'டெல்டா ஏர்லைன்ஸ்' அப்போது ஒரு சலுகை திட்டம் வைத்திருந்தது. அமெரிக்காவில் எங்கு வேண்டுமானாலும், எத்தனை தடவை வேண்டுமானாலும் போய் வரலாம் என, சலுகை கட்டணத்தில் டிக்கெட் கொடுப்பர். ஒரு மாதம் அது செல்லுபடியாகும். சில நிபந்தனைகள் உண்டு. லக்கேஜ் கொண்டு செல்ல முடியாது; முன்பதிவும் கிடையாது. அந்த இரண்டும் எனக்கு பிரச்னை இல்லை.
அமெரிக்க மேப்பை எடுத்து வைத்து, பக்காவாக பயணத் திட்டம் தயாரிப்பேன். இரவு நேரப் பயணம்தான் எப்போதும். இரவு முழுதும் பறக்கக்கூடிய வகையில், நீண்ட துாரத்தில் உள்ள ஊர்களாக தேர்வு செய்வேன்.
அதில், எனக்கு இரண்டு வசதிகள் இருந்தன. ஒன்று, பகல் நேரத்தில் அந்த ஊரில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பங்களைப் பார்த்து பேசலாம். மற்றொன்று, நள்ளிரவில் அல்லது விடிவதற்கு முன் போய் சேர்ந்தால், தங்குவதற்கு ஹோட்டல் தேட வேண்டும்; அதற்கெல்லாம் பணம் கிடையாது.
நான் போய் சேரும்போது நன்றாக விடிந்திருக்கும். அந்த ஊரில் உள்ள யாராவது ஒரு இந்தியர் ஏர்போர்ட் வந்து எனக்காக காத்திருப்பார். அவர் உதவியுடன் பல இந்திய குடும்பங்களை சந்திப்பேன். இப்படி எக்கச்சக்கமான இந்தியர்களோடு பழக்கம் ஏற்பட்டது. கூடவே இருந்து அவர்களின் வாழ்க்கை முறைகள், வசதிகள், பிரச்னைகள் எல்லாவற்றையும் பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.
இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன்னரே, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களாக இருந்தால், தாய்நாட்டின் நினைவுகள் அவர்கள் உள்ளத்தில் ஊறிக்கொண்டே இருக்கும். வேர்களை யாராலும் மறக்க முடியுமா? ஆனால், அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்தளவுக்கு ஒட்டுதல் இருக்காது.
அவர்களுக்கும், இந்தியாவுடன், இந்திய மரபுகள், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் ஆசைப்படுவர்.
ஆனால், அந்த ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாமல் குழம்பி இருப்பர். இந்த விஷயத்தில் தாய்நாட்டில் இருந்து அவர்களுக்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் யாராவது முன்வர மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். அதை நான் புரிந்து கொண்டேன்.
அவர்கள் ஏங்கிக் கொண்டிருந்த ஆதரவை வழங்க என்னால் முடியும் என்று, அப்போதே உணர்ந்தேன். நமக்காக கவலைப்பட அக்கறை காட்ட, நம் தாய்நாட்டில் ஒருத்தன் இருக்கிறான் என்ற எண்ணம், அவர்களுக்கு பெரிய ஆறுதலைக் கொடுத்தது.
நானும், என்னோடு சேர்ந்தவர்களும் அமெரிக்க இந்தியர்கள் மனதில் புதிய நம்பிக்கையை விதைக்க முடிந்தது. அதுதான் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று வலுவான ஒரு விருட்சமாக எழுந்து நிற்கிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், அவரவர் துறையில் சாதனை படைத்தவர்கள்; இன்னும் படைப்பவர்கள். நான் செல்கின்ற ஒவ்வொரு நாட்டிலும், அதன் அதிபரோ பிரதமரோ, இந்த சிறப்பம்சம் குறித்து பேசத் தவறுவதே இல்லை.
சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்கள் உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை என்று பேசப்படுகிறதே?
ஊடக சுதந்திரம் பற்றிய கேள்விக்கு நான் சொன்ன பதில் தான் இதற்கும். இந்த பேச்சில் உண்மை கிடையாது. சிறுபான்மை மக்கள் இங்கே மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்பவர்கள், யார் எங்கே எப்போது என்று சொல்வது இல்லை.
இப்படி குற்றம் சொல்பவர்கள் தன்னைச் சுற்றி, ஒரு சுவர் எழுப்பி அதற்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் சொல்வதைக் கேட்காமல், நேராக இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களிடமே நீங்கள் கேட்டுப் பார்க்கலாம். முஸ்லிம், கிறிஸ்துவர், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். அவர்களே, இந்த கட்டுக்கதையை நம்ப மாட்டார்கள். சிறுபான்மையிலும், சிறுபான்மையான பார்சி சமூகத்தினர் இங்கே எப்படி சிறப்புடன் வாழ்கிறார்கள் என்பதை விசாரித்து பாருங்கள்.
முன்னர் நான் சொன்னது போல, இந்த பிரிவுக்கு அந்த பிரிவுக்கு என்று பிரித்துப் பிரித்து நலத்திட்டங்கள் தயாரிப்பதை எல்லாம், என் அரசு நிறுத்தி விட்டது.
எந்த திட்டமாக இருந்தாலும், அதன் பலன்கள் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரி தான் கிடைக்கும்; வேறுபாடே கிடையாது. வீடு, மின்சாரம், குடிநீர், கழிப்பறை, ரேஷன், எரிவாயு, வங்கிக்கடன் என்று எல்லாமே, இப்போது பொதுவில் வந்து விட்டது. யாரும் எனக்கு அது கிடைக்கவில்லை, இது தரவில்லை என்று சொல்லவே முடியாது.
மோடியின் இந்தியாவில், பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?
இந்தியாவின் வளர்ச்சிக் கதையே பெண்களை சுற்றித்தான் பின்னப்படுகிறது. அவர்கள்தான் முன்னால் நிற்கிறார்கள். பெண்களின் முன்னேற்றம் என்ற கோஷத்தையே, நாங்கள் மாற்றி எழுதி இருக்கிறோம்.
ஆமாம்... இது பெண்கள் தலைமை வகித்து செயல்படுத்தும் முன்னேற்றம். நீங்களும் அந்த வார்த்தையை பயன்படுத்தி பேசுவதை பார்க்க பெருமையாக இருக்கிறது.
பார்லிமென்டிலும், சட்டசபைகளிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் ஆண்களைக் காட்டிலும், பெண்கள் 15 சதவீதம் அதிகம். பேறுகாலத்தில் மரணம் அடையும் பெண்கள், ஒரு லட்சத்துக்கு 130 ஆக இருந்ததை ஆறு ஆண்டுகளில், 97 ஆக குறைத்திருக்கிறோம்.
உழைக்கும் மகளிருக்கு, உலகின் எந்த நாட்டுக்கும் சளைக்காத வகையில் உரிமைகளும், சலுகைகளும் தந்திருக்கிறோம். கர்ப்பிணியருக்கு, 26 வாரங்கள் விடுப்பு அளிக்கிறோம். நிறுவனங்களில் குழந்தை காப்பகம் அமைப்பதை கட்டாயமாக்கி இருக்கிறோம். ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் பெண்கள் சமவாய்ப்பு பெற்றுள்ளனர்.
ஏழைப் பெண்களுக்காக, 29 கோடி வங்கி கணக்குகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 30 கோடி பெண்கள் தொழில் செய்ய ஜாமின் இல்லாத கடன் வழங்கியுள்ளோம்.
கிராமங்களில் எங்கள் பெண்கள் ட்ரோன்களை இயக்குகின்றனர். உலகிலேயே மிக அதிகமான பெண் விமானிகள், எமது நாட்டில் பறந்து கொண்டிருக்கின்றனர்.
இந்திய தொழிலாளர்களில் பெண்களின் பங்கு, 23 சதவீதமாக இருந்ததை ஆறு ஆண்டுகளில், 37 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை அவசியம் என்பதையும், சானிட்டரி நாப்கின் தேவை குறித்தும், சுதந்திர தின உரையில் பேசிய முதல் பிரதமர் நான்.
பெண்கள் நலன் குறித்த அக்கறையின் வெளிப்பாடு அது.
சீனாவுக்கு எதிரான, 'க்வாட்' அமைப்பில் இந்தியா சேர்ந்ததன் பின்னணி என்ன?
அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போல, இந்தியாவும் ஒரு பெரிய நாடு. உலகின் பல கூட்டமைப்புகளில் இந்த நாடுகள் உறுப்பினராக உள்ளன. 'க்வாட்' அமைப்பும் அப்படித்தான். அது, இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற பொதுநோக்கத்தில் உருவான அமைப்பு. எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல.
சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்னை தீராமல்நீடிக்கிறதே?
சீனாவுடனான எங்கள் உறவு முக்கியமானது. எல்லை பிரச்னைக்கு சீக்கிரம் தீர்வு கண்டால் மட்டுமே, இந்த உறவு நல்லபடியாக தொடர முடியும்.
உலகின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான சீனாவும் இந்தியாவும் நட்புடன் இருப்பது, உலகத்துக்கு நல்லது. அதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
பாகிஸ்தான் உடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இம்ரான்கான் நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில், நான் கருத்து சொல்ல மாட்டேன். புதிதாக பதவி ஏற்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இரு நாடுகளுக்கு இடையே அமைதியும், பரஸ்பர நம்பிக்கையும், நல்லெண்ணமும் இருந்தால், நம் முன்னேற்றம் சுலபமாகும் என்பதை ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறேன். அதற்கு முதல் தேவை, பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது இன்னும் விமர்சிக்கப்படுகிறதே?
ஏன் நீக்கினோம் என்பதை வசதியாக மறந்து விட்டு பேசுகின்றனர். நானோ, வேறு யாரோ சொல்வதை நம்பாதீர்கள். நீங்களே காஷ்மீருக்கு போய் பாருங்கள்.
நீங்கள் கேள்விப்பட்ட தகவலுக்கும், அங்குள்ள கள நிலவரத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியும். நான் சென்ற மாதம் போயிருந்தேன். அங்குள்ள மக்களுக்கு முதல் முறையாக வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
நல்ல நிர்வாகம் என்றால் என்ன, தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும், பிரஜைகளுக்கு அதிகாரம் கிடைத்தால் என்ன செய்ய முடியும் என்பதை, இப்போதுதான் அவர்கள் அனுபவ ரீதியாக உணர்கின்றனர். ஆண்களுக்கு நிகரான உரிமைகளை, பெண்கள் அனுபவிக்க, துவங்கியுள்ளனர். பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன.
சென்ற ஆண்டில் மட்டும், 2 கோடிக்கு மேலான சுற்றுலா பயணியர் வந்துள்ளனர். உலக அழகிப் போட்டி, 'ஜி - 20' மாநாடு, பார்முலா - 4 ரேஸ் என, சர்வதேச நிகழ்ச்சிகள் நடக்கத் துவங்கியுள்ளன. டிஜிட்டல் எகானமி, ஸ்டார்ட் அப், ஸ்மார்ட் சொல்யூஷன் என்று, நாட்டின் மற்ற மாநிலங்களில் கண்ட மாற்றமும், வளர்ச்சியும் காஷ்மீருக்கும் எட்டியிருக்கிறது.
அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணித்து, அதில் நீங்கள் பூஜையும் செய்தது குறித்து குறை சொல்கிறார்களே?
ஸ்ரீராம் என்பது, இந்திய தேசிய உணர்வில் இரண்டறக் கலந்த மந்திர வார்த்தை. இந்திய நாகரிகத்தின் மாண்புகள் அனைத்தையும், பிரதிபலிப்பது ராமரின் வாழ்க்கை.
பிறந்த இடத்துக்கு ராமர் திரும்பி வந்ததன் வாயிலாக, நாட்டையே அவர் மீண்டும் ஒருங்கிணைத்து இருக்கிறார். அந்த வகையில், இது மத நிகழ்வு என்பதை விட, இந்தியாவின் கலாசார சங்கமம் என்று சொல்வதே பொருத்தமானது. எனவேதான், இந்தியர்கள் அந்த பொன்னான நாளை இரண்டாம் தீபாவளியாகக் கொண்டாடினர்.
வரலாற்றில் நீங்கள் எவ்வாறு நினைவு கூறப்படுவீர்கள் என்பதை யோசித்து பார்த்திருக்கிறீர்களா?
அது என் வேலை இல்லை. அதுபற்றி நான் யோசித்ததும் இல்லை. இந்த நாட்டின் மக்கள், என் குடும்பம். அவர்களுடைய வாழ்க்கையை, எந்த வகையில் என்னால் மேம்படுத்த இயலும் என்பதை மட்டுமே நான் சிந்திக்கிறேன்.
என் நாட்டு மக்கள், கவுரவமாக வாழ முடிகிறது, தங்கள் கனவுகளை நனவாக்க முடிகிறது என்ற நிலை வந்தால், என் வேலை முடிந்ததாக கருதுவேன். அதுவரை எனக்கு ஓய்வு என்பது கிடையாது.
தலைமைப் பண்புக்கு உங்களை உதாரணம் காட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். அதன் ரகசியத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
யார் என்ன சொன்னாலும், பொறுமையுடன் காது கொடுத்து கேட்பேன். அது எனக்கு கிடைத்த வரம். இன்னொன்று, என் கவனம் சிதறுவது கிடையாது. ஒரு வேலையில் இறங்கி விட்டால் டெலிபோன் ஒலிப்பதோ, மெசேஜ் வரும் சத்தமோ, என் கவனத்தை ஈர்க்க விடமாட்டேன்.
பெரிய தலைவனாக இருந்தாலும், கடைக்கோடி பிரஜைகள் வரை என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நான் கிட்டத்தட்ட இந்த நாட்டின், 80 சதவீத மாவட்டங்களில் ஒரு ராத்திரியாவது தங்கி இருக்கிறேன்.
அதனால், அநேகமாக எல்லா இடத்திலும் எனக்கு சராசரி மக்களுடன் நேரடி தொடர்பு உண்டு. அது எனக்கு நம்ப முடியாத அளவுக்கு உதவியாக இருக்கிறது. ஒரு சம்பவம் சொல்கிறேன்... கேளுங்கள்.
குஜராத்தில் நான் முதல்வராக இருந்த காலம். அதிகாலை 3:00 மணிக்கு போன் ஒலித்தது. யாரென்று பார்த்தால், கர்ஜன் என்ற சிற்றுாரில் இருந்து ஒருத்தர் பேசினார். எங்கள் வீட்டில் சாப்பிட வந்தீர்களே, நினைவிருக்கிறதா என்று கேட்டார். நல்லது, என்ன விஷயம் என்று கேட்டேன். ஊரில் வெடி சத்தம் கேட்டது என்றார். எங்கே என்றேன். ரயில்வே ஸ்டேஷன் பக்கமாக இருக்கும் என்று நினைப்பதாக சொன்னார்.
நான் கலெக்டருக்கு போன் போட்டு என்னவென்று பார்க்கச் சொன்னேன். ஒரு ரயில் விபத்து நடந்து, அதன் சத்தம் இந்த நண்பருக்கு கேட்டிருக்கிறது. கலெக்டருக்கும், அதிகாரிகளுக்கும் ஆச்சரியம்.
எப்படி நமக்கு முன்னால் முதல்வருக்கு தெரிந்தது என்று. விபத்து நடந்த உடனே அதிகாரிகள் எல்லாம் போனதால், மீட்பு வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்தன. விடிவதற்குள் அந்த லைன் சரியாகி ரயில் போக்குவரத்து தொடர்ந்தது.
இன்னொன்று வேலையை பிரித்து கொடுப்பது. எல்லாவற்றையும் நானே முன்னின்று செய்ய நினைக்க மாட்டேன். நம்பி பொறுப்பு கொடுத்தால் சிறப்பாக செய்து முடிப்பர் என்பது என் அனுபவம்.
நான் சிறந்த பேச்சாளர் என்கின்றனர். எனக்கே அது தெரியாது. அரசியலுக்கு வந்து மேடைகளில் பேசியதை பார்த்து சிலர் சொன்னார்கள். பிறகுதான், சரி, அப்படி என்றால் அந்த திறமையை நிறைய நல்லது செய்ய பயன்படுத்துவோமே என்று தீர்மானித்தேன்.
இவ்வளவு துாரம் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனாலும், எனக்கு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அனேகமாக எல்லா கடிதங்களையும் ஒரு கிளான்ஸ் பார்த்து விடுவேன்.
அதில் தான் சராசரி ஜனங்களின் நிஜமான உணர்வுகள் பிரதிபலிக்கும். அப்படி ஒரு லெட்டரை படித்த போது எழுந்த சிந்தனையில் உதித்தது தான், 'மன் கி பாத்' ரேடியோ உரையாடல். 110 எபிசோட் முடித்து விட்டேன்.
'நெகடிவிட்டி' என்கிற எதிர்மறை எண்ணங்கள் முன்னேற்றத்தின் எதிரி. நல்லவேளையாக, அது போன்ற எண்ணங்களுக்கு ஆயுசு கம்மி. மாறாக 'பாசிடிவிடி' என்கிற நல்ல சிந்தனை அழிவற்றது. தொடர்ந்து வரக்கூடியது. மன் கி பாத் வாயிலாக மக்கள் எனக்கு பாசிடிவிட்டி தருகின்றனர். அதே வழியில், நானும் அவர்களுக்கு முடிந்தவரை திருப்பிக் கொடுக்கிறேன்.

