சுவர்கள் நம் வசமாகட்டும் தி.மு.க.,வின் தேர்தல் யுக்தி
சுவர்கள் நம் வசமாகட்டும் தி.மு.க.,வின் தேர்தல் யுக்தி
ADDED : செப் 07, 2024 04:46 AM

திருப்பூர்: 'அனைத்து பகுதிகளிலும், சுவர் விளம்பரங்கள் எழுதுவதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும். சட்டசபை தேர்தல் வரை சுவர்கள் தங்கள் வசம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.' என தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த போது, பல்வேறு அறிவுரைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அவற்றை நினைவூட்டும் விதமாகவும், அந்த அறிவுரைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கட்சி தலைமை அறிக்கை பெற்று வருகிறது.
கூட்டத்தின் போது, தெரிவிக்கப்பட்ட வகையில், மாவட்ட பொதுக்குழு, நகர, பகுதி, கிளை நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அது குறித்த விவரங்கள் மாவட்ட நிர்வாகிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்சி தலைமையிலிருந்து இக்கூட்டத்தின் போது, தெரிவிக்கப்பட்ட சுவர் விளம்பரம் குறித்த அறிவுரை நினைவூட்டி அதன் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள தகவல்:
அனைத்து பகுதிகளிலும், கட்சி சார்பில் சுவர் விளம்பரம் செய்ய வேண்டும். இதில் கட்சி மற்றும் அனைத்து சார்பு அணிகளும் முழுமையாக பங்கேற்க வேண்டும். மற்ற கட்சியினர் சுவர் விளம்பரங்கள் எழுதுவதற்கு முன்பே சுவர் விளம்பரங்கள் மூலம் அவற்றை கைப்பற்ற வேண்டும்.
கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாள், கட்சி முப்பெரும் விழா என விளம்பரங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட வேண்டும். அரசு திட்டங்கள், சாதனைகள் குறித்த விளம்பரங்கள் வாயிலாக மக்களை சென்றடைய வேண்டும். இது குறித்த போட்டோக்கள் தலைமைக்கு அனுப்ப வேண்டும். வரும் 2026 தேர்தலுக்கு இந்த விளம்பரங்கள் மிகுந்த உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.