பிதர்காடு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு?
பிதர்காடு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு?
UPDATED : ஏப் 13, 2024 05:05 AM
ADDED : ஏப் 12, 2024 11:38 PM

பந்தலுார்:'பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பிதர்காடு பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது,' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும், குடிநீர் வினியோகம் கிடைக்க செய்யும் வகையில், மத்திய அரசு மூலம், ஜல் ஜீவன் மிஷன் எனும் திட்டத்தின் கீழ், புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
அதில், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, பிதர்காடு பஜார் பகுதியில், 166 குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, 24 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
பழைய குழாயில் இணைப்பு
ஆனால், புதிய குடிநீர் குழாய்களுக்கு பதில் பழைய, துருப்பிடித்த குடிநீர் குழாய்கள் மூலமே இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதுடன், ஒரு சில இடங்களில் மட்டும் குறைவான துாரத்துக்கு தரம் குறைந்த குழாய்கள் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் வகையில், பெரிய சைஸ் குழாய்களும் பொருத்தப்பட்டு உள்ளது. குடியிருப்புகளுக்கு பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் உட்பகுதியில் சிறிய குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால், தண்ணீர் சீராக வராமல் சொட்டு சொட்டாகவே வருகிறது.
இதன் மூலம் ஒரு வீட்டிற்கு, 14 ஆயிரத்து 690 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பழைய குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதால், பெரிய அளவிலான முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இந்த முறைகேடுகள் குறித்து, ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கு தகவல் தெரிவித்தும், அவரும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறார். ஒரு வீட்டிற்கு, 500 ரூபாய் கூட செலவிடவில்லை. எனவே, இது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னர் அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும்,'என்றனர்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் குமார் கூறுகையில்,'' ஜல்ஜீவன் திட்டத்துக்கென தனி அதிகாரிகள் உள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

