95 ஆண்டுகளாக கம்பீர தோற்றத்தில் மேட்டூர் அணையின் 16 கண் மதகு
95 ஆண்டுகளாக கம்பீர தோற்றத்தில் மேட்டூர் அணையின் 16 கண் மதகு
ADDED : ஜூலை 14, 2024 01:36 AM

மேட்டூர்: மேட்டூர் அணையாவது, தலைமை மற்றும் வடிவமைப்பு பொறியாளர் எல்லீஸ் தலைமையில், 1925 ஜூலை, 20ல் தொடங்கி, 1934 ஆகஸ்ட், 21ல் கட்டி முடிக்கப்பட்டது.
அணை கட்டுமான பணி நடக்கும் போதே மற்றொரு புறம், 1929 ஜூலை, 15ல் இடதுகரை பகுதியில் உபரிநீரை வெளியேற்றும், 16 கண் மதகின் கட்டுமான பணி தொடங்கி, 1931 ஆகஸ்ட், 20ல் முடிக்கப்பட்டது.
அதற்கு, தலைமை பொறியாளர் நினைவாக, 'எல்லீஸ் சாடல் சர்பிளஸ் கோர்ஸ்' என, பெயர் சூட்டப்பட்டது. அந்த மதகின் கட்டுமான பணிக்கு பயன்படுத்திய இரும்பு, ஸ்காட்லாந்தில் இருந்து கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு மதகில் உள்ள ஷட்டர்களும், 60 அடி அகலம், 20 அடி உயரம், 52.25 டன் எடை உடையவை.
அணை நிரம்பினால் இயந்திரங்களால் ஷட்டர்களை உயர்த்தி நீரை வெளியேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. மதகுகளால் அதிகபட்சம், 3.57 லட்சம் கன அடி நீரை வெளியேற்ற முடியும்.
இந்த, 16 கண் மதகு கட்டுமான பணி தொடங்கி, 94 ஆண்டுகள் முடிந்து, நாளை, 95ம் ஆண்டு தொடங்க உள்ளது. ஆனால், இன்னமும் கம்பீரமாக, கட்டுமான பணிக்கு சான்றாக, தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும்படி உள்ளது.