'மைக்ரோ கன்ட்ரோலர் சிப்': மறு ஆய்வுக்கு விண்ணப்பம்
'மைக்ரோ கன்ட்ரோலர் சிப்': மறு ஆய்வுக்கு விண்ணப்பம்
ADDED : ஜூன் 21, 2024 04:05 AM

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் உட்பட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு வேட்பாளர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின், 'மைக்ரோ கன்ட்ரோலர் சிப்'களை மறு ஆய்வு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி, ஓட்டு சீட்டு முறைக்கு மாற உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏப்., 26ல் உத்தரவு பிறப்பித்தது.
அதில், ஓட்டு சீட்டு முறையை நிராகரித்த நீதிமன்றம், தேர்தலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் வேட்பாளர்கள் விரும்பினால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர் சிப்களை மறு ஆய்வு செய்ய அனுமதிக்க உத்தரவிட்டது.
இதற்கு, தேர்தல் கமிஷனிடம் 47,200 ரூபாய் கட்டணம் செலுத்தி வேட்பாளர்கள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எட்டு வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
வேலுார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்திடம் 2,15,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரிடம் 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற தே.மு.தி.க.,வின் மறைந்த தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதன்படி, இவர்கள் போட்டியிட்ட லோக்சபா தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 5 சதவீத இயந்திரங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இவர்கள் இருவரை தவிர, மஹாராஷ்டிராவின் அகமதுநகர் தொகுதி மற்றும் தெலுங்கானாவின் ஜஹீராபாத் தொகுதி பா.ஜ., வேட்பாளர்கள், சத்தீஸ்கரின் கன்கேர், ஹரியானாவின் கர்னால், பரிதாபாத் தொகுதி காங்., வேட்பாளர்கள், ஆந்திராவின் விஜயநகரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்., வேட்பாளர் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -