கனிமவள கொள்ளை: போஸ்டரால் பரபரப்பு! கட்சிகளை தொடர்புபடுத்தி விமர்சனம்
கனிமவள கொள்ளை: போஸ்டரால் பரபரப்பு! கட்சிகளை தொடர்புபடுத்தி விமர்சனம்
ADDED : செப் 04, 2024 05:04 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கனிமவள கொள்ளை குறித்தும், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கட்சியினரை தொடர்புபடுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
ஆனால், விதிமுறைகள் மீறி கனிமவளங்கள் அதிகளவு கடத்தப்படுவதாகவும்,கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளிடம், ஆளுங்கட்சி ஆதரவுடன் தனியார் சிலர் வசூலில் ஈடுபட்டனர். இதை கண்டித்து, கிணத்துக்கடவில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். இதையடுத்து, சிறிது காலம் வசூல் நிறுத்தப்பட்டது.
தற்போது, இப்பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது போன்று, பொள்ளாச்சி நகரில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொரு போஸ்டரிலும் ஒவ்வொரு விதமாக அச்சடிக்கப்பட்டு தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., கட்சிகளையும், ஒரு சிலர் புகைப்படத்துடன் வெளியிட்டு வருக, வருக என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அதில், கிராவல், கல்குவாரிகளில் வசூல் வேட்டையை தொடங்க வரும் மூவேந்தர்களே வருக... தி.மு.க., ஆட்சியில் கொள்ளையடித்து அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு சமமாக பிரித்து கொடுக்கும் வள்ளல்களே வருக, வருக, நீர்வளத்துறை அமைச்சரின் செல்லப்பிள்ளையே என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
போஸ்டர்களை யார் ஒட்டியது என்பது தெரியாததால், அரசியல் கட்சியினரும், போலீசாரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தொழில் போட்டியா?
உரிய அனுமதி பெற்று கனிமவளங்கள் எடுத்துச் சென்றாலும், ஆளுங்கட்சி பெயரில் சிலருக்கு கப்பம் கட்டிய பின்னரே லாரி எடுத்துச் செல்ல முடியும். தற்போது, இந்த செயலில் ஈடுபடுவோர், 400 ரூபாய் ஒரு வண்டிக்கு கேட்பதாக கூறப்படுகிறது.
இதற்கு, கேரளா மாநிலம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனிமவளங்கள் எடுத்துச்செல்வோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆளுங்கட்சிக்கு நெருக்கமான ஒருவருக்கு வசூல் அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்பின், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள், இந்த பணியில் ஈடுபட்டனர்.
அமலாக்கத்துறை ரெய்டுக்கு பின், வசூல் அடாவடி குறைந்த நிலையில், வசூல் குரூப் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு 'செக்' வைக்க, மற்றொரு குரூப் போஸ்டர் ஒட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.