ADDED : மார் 25, 2024 05:23 AM

சென்னை : பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் மோடி மூன்று நாட்கள் தமிழகம் வர உள்ளார். இது தவிர, மத்திய அமைச்சர்கள் 18 பேரும்; உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அடுத்தடுத்து தமிழகம் வந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
நாடு முழுதும் நடக்கும் லோக்சபா தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்., 19ல் நடக்கிறது.
பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்து, தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் கோவையில் போட்டியிடுவதால், அங்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
எனவே, தமிழகத்தில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, பிரதமர் மோடி தமிழகத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் வர உள்ளார்.
அவர், ஏப்., முதல் வாரத்தில் ஒரு நாள், இரண்டாவது வாரத்தில் ஒரு நாள், தேர்தல் நெருக்கத்தில் ஒரு நாள் என மூன்று நாட்கள் வந்து, தஞ்சை, விருதுநகர், கரூர் என, இதுவரை செல்லாத தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்து பிரசாரம் செய்ய வர உள்ளார். இது தவிர, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட 17 மத்திய அமைச்சர்கள், திருவண்ணாமலை, வேலுார் என தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
அண்ணாமலை மட்டுமின்றி, மத்திய அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பலர் வேட்பாளர்களாக உள்ளனர். எனவே, தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில், பிரதமர் மற்றும் 18 மத்திய அமைச்சர்கள் வர உள்ளனர்.
அவர்கள், மாநிலம் முழுதும் சென்று மக்களை சந்தித்து, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பர்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், தமிழகத்தில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ள வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

