ADDED : ஏப் 01, 2024 12:23 AM

ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் நாகவுரில், வரும் லோக்சபா தேர்தலில், பழைய போட்டியாளர்களான ஜோதி மிர்தா, ஹனுமன் பெனிவால் ஆகியோர் மீண்டும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். ஆனால், இந்த முறை இருவருமே புதிய கட்சியில் களம் காண்கின்றனர்.
வாய்ப்பு
ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 25 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 19 மற்றும் 26ல் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
ஜாட் சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் நாகவுர் லோக்சபா தொகுதியில், கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த ஜோதி மிர்தா போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து, 'இண்டியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி தலைவர் ஹனுமன் பெனிவால் போட்டியிடுகிறார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், நாகவுரில் ஹனுமன் பெனிவாலை எதிர்த்து, காங்., சார்பில் போட்டியிட்ட ஜோதி மிர்தா தோல்வி அடைந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட ஜோதி மிர்தா, காங்கிரசை சேர்ந்த தன் உறவினரான ஹரேந்திர மிர்தாவிடம் தோற்றார்.
இந்த பிராந்தியத்தில் ஜோதி மிர்தா குடும்பத்துக்கு அதிக செல்வாக்கு இருப்பதால், லோக்சபா தேர்தலில் அவருக்கு மீண்டும் பா.ஜ., வாய்ப்பு வழங்கி உள்ளது.
சுயேச்சை
நாகவுரின் நான்கு முறை எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,யான ஹனுமன் பெனிவால், 2013ல் பா.ஜ.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 2013ல் நடந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற அவர், தன் செல்வாக்கை நிரூபித்தார்.
கடந்த 2018ல், ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் என்ற கட்சியை ஹனுமன் பெனிவால் துவக்கினார்.
அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மூன்று தொகுதிகளை அவரது கட்சி கைப்பற்றியது. 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி சார்பில் நாகவுரில் போட்டியிட்டு வென்ற ஹனுமன் பெனிவால், 2020ல் விவசாயிகள் போராட்டம் காரணமாக கூட்டணியை முறித்தார்.
இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில், பழைய போட்டியாளர்களான ஜோதி மிர்தா மற்றும் ஹனுமன் பெனிவால் மீண்டும் நாகவுர் தொகுதியில் களமிறங்குகின்றனர்.
ஆனால், இம்முறை இருவருமே புதிய கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியில் இருவருக்குமே சம பலம் இருப்பதால், தேர்தல் பிரசாரத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதில், யார் வெற்றி வாகை சூடப் போகின்றனர் என்பது, ஜூன் 4ல் தெரிந்து விடும்
- நமது சிறப்பு நிருபர் - .

