'ஒரே நாடு; ஒரே கார்டு' திட்டத்தில் சிக்கல்; மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்துமா?
'ஒரே நாடு; ஒரே கார்டு' திட்டத்தில் சிக்கல்; மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்துமா?
UPDATED : மே 11, 2024 04:48 AM
ADDED : மே 11, 2024 12:22 AM

திருப்பூர்;வெளியூர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்குவதில், சில ரேஷன் கடைக்காரர்கள் தயங்குகின்றனர்; ரேஷன் பொருள் இருப்பு சரிகாட்டும் போது, அதிகாரிகள் ஏற்க மறுப்பதாக கூறுகின்றனர்.
ரேஷன் பொருள் வினியோகத்தை பொருத்தவரை, 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், ரேஷன்கார்டுதாரர்களுக்கு பெரும் பயன் அளித்து வருகிறது. தற்போதைய சூழலில், திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை, ஏராளமான வெளிமாவட்ட மக்கள், வேலைக்காக திருப்பூர் வந்து 'செட்டில்' ஆகியுள்ளனர்.
தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் கார்டு பெற்று, அங்கு ரேஷன் பொருட்களை வாங்கி வந்த நிலையில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில், இடம் பெயர்ந்த ஊரில், தங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகேயுள்ள ரேஷன் கடையில் இருந்தே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது, இடம் பெயர்ந்த குடும்பத்தினருக்கு பேருதவியாக இருந்தது.
பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சலுகையை பெறுவதற்கு மட்டும், தங்கள் சொந்த ஊர் முகவரி சார்ந்த ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியிருந்தது.
சமீபநாட்களாக, வெளியூர் ரேஷன் கார்டு தாரர்களுக்கு, ரேஷன் பொருட்களை வழங்கி வந்த ரேஷன் கடைக்காரர்கள் கூட, ரேஷன் பொருட்களை தர தயங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது. 'வெளியூர் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க, அதிகாரிகள் ஆட்பேசனை தெரிவிக்கின்றனர்' என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, வெளியூர் ரேஷன் கார்டுதாரர்கள் சிலர் கூறியதாவது:
எங்களது ரேஷன் கார்டுகளை தற்போதுள்ள முகவரிக்கு மாற்றிக் கொள்ளும்படி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகின்றனர்; இதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இடம் பெயர்ந்த பகுதியில் உள்ள முகவரியில் ரேஷன் கார்டு இருப்பது நல்லது தான். ஆனால், வழங்கல் அலுவலர் களால், ரேஷன் கார்டு களின் முகவரி மாற்றம், உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் உள்ளது.
மாவட்டத்தில், ஏற்கனவே, ரேஷன் கார்டு வேண்டி, முகவரி மாற்றம் செய்து விண்ணப்பித்தவர்கள் என, 9,000 பேர் ரேஷன் கார்டுக்காக காத்திருக்கின்றனர். அந்த விண்ணப்பங்கள், மாதக்கணக்கில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில், எங்கள் விண்ணப்பமும் கிடப்பில் போடப்பட்டுவிடுமோ என்ற தயக்கத்தால் தான், முகவரி மாற்றம் செய்து கொள்ளாமல் வைத்துள்ளோம். எனவே, வெளியூர் ரேஷன் கார்டுதார்களின் முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பத்தை, அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து முகவரி மாற்றம் செய்து கொடுப்பதை உறுதிப்படுத்தினால், இடம் பெயர்ந்தோர் பலர், தங்கள் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்து கொள்வர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.