UPDATED : ஆக 01, 2024 05:14 AM
ADDED : ஆக 01, 2024 02:17 AM

சமூகத்தில் பின் தங்கியவகுப்பைச் சார்ந்தவர்களுக்கு, அதாவது, ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்றால், முதலில் நினைவிற்கு வருவது, மண்டல் கமிஷன். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், காங்கிரஸ்காரர் அல்ல.
எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் தோற்றது; ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. அப்போதைய பிரதமர் பொறுப்பேற்றவர், மொரார்ஜி தேசாய். அவர் தான், 1979ல் மண்டல் கமிஷனை அமைத்தார்.
பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் என்பவர், இந்த கமிஷனின் தலைவர் என்பதால், அவர் பெயராலேயே, மண்டல் கமிஷன் என அழைக்கப்பட்டது. பீகாரின் முன்னாள் முதல்வர், இந்த மண்டல்.
இந்தியா முழுக்க உள்ள சமுதாயத்திலும், கல்வியிலும் பின்தங்கிய பிரிவினரைக் கண்டறிந்து, அவர்களுக்கு சமுதாயத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளைப் போக்க, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து சிபாரிசு செய்வது, இந்த கமிஷனின் குறிக்கோள் என, மொரார்ஜி தேசாய் அரசு உத்தரவிட்டது.
அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களில் வேலை மற்றும் கல்வி கற்க, இவர்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து, சிபாரிசு செய்வது இந்த கமிஷனின் வேலை.
மீண்டும் இந்திரா வந்தார்
ஆனால், இந்த கமிஷன் தன் அறிக்கையை தருவதற்கு முன்பாக, ஜனதா கட்சிக்குள் பலர் பிரதமராக முயற்சித்தனர். விளைவு, ஜனதா ஆட்சி கவிழ்ந்தது.
பிறகு, 1980ல் நடந்த லோக்சபா தேர்தலில், எமர்ஜென்சி கொடுமைகளை மறந்து மக்கள், காங்கிரசுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்தனர். காங்கிரஸ் வெற்றி பெற்று, இந்திரா பிரதமர் ஆனார்.
மண்டல் கமிஷனின் கதி என்னாகும் என, ஜனதா கட்சி தலைவர்கள் பயந்தனர். ஆனால், இந்திரா அப்படி எதுவும் செய்யவில்லை. கமிஷன் அறிக்கையை சமர்ப்பிக்க, மூன்று மாத கால அவகாசம் கொடுத்தார் இந்திரா.
அதன்பிறகு தன் அறிக்கையை, 1980, டிசம்பர் 31ல், அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங்கிடம் அளித்தது.
கமிஷன் சொன்னது என்ன?
நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 52 சதவீதம் பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி.,க்கு 27 சதவீதஇட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
-அரசிடமிருந்து நிதி உதவி பெறும் அமைப்புகள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும்.
பரிந்துரைகளை, இந்திராவும் சரி, ராஜிவும் சரி... கண்டுகொள்ளவே இல்லை.
குறைந்த பட்சம் இந்த அறிக்கையை பார்லிமென்டில் சமர்ப்பித்து, விவாதமாவது நடத்தியிருக்கலாம்; அதையும் செய்யவில்லை இந்திரா.
ஜாதியை வைத்து அரசியல் செய்வதை இந்திரா எதிர்த்தார். அதனாலேயே மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஓரங்கட்டிவிட்டார்.
இதை வைத்து இந்திரா, ஓ.பி.சி.,க்கு எதிரானவர் என சொல்ல முடியாது என ஒரு சாரார் கூறுகின்றனர். உண்மை என்னவென்றால், ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டை அவர் அங்கீகரிக்கவும் இல்லை; நிராகரிக்கவும் இல்லை.
இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு, 400க்கும் அதிகமான எம்.பி.,க்களுடன் அதீத மெஜாரிடியுடன் ஆட்சி அமைத்தார் ராஜிவ். அவரும் மண்டல் கமிஷனைத் தொடவே இல்லை.
ராஜிவ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங். இவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது, போபர்ஸ் ஊழல் வெளியானது. இதற்கு காரணம் ராஜிவ் என, விமர்சனம் செய்தார் சிங்; இதனால் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார்.
ஜன் மோர்ச்சா என்கிற அமைப்பைத் தொடங்கிய சிங் பின், ஜனதா, லோக் தளம், காங்கிரஸ் - எஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஜனதா தளம் கட்சியை உருவாக்கினார்.
கடந்த, 1989ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் வி.பி.சிங். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக 143 எம்பிக்களை பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க முடியவில்லை.
பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன், 1989, டிசம்பர் 2ல் பிரதமரானார் வி.பி.சிங். ஆகஸ்ட் மாதம், 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படும் என அறிவித்தார் அவர்.
தொடர்ந்து, வட மாநிலங்களில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டில்லியில் ராஜிவ் கோஸ்வாமி என்கிற மாணவர் தீக்குளித்தார். ஆனால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.
எதிர்த்த ராஜிவ்
லோக்சபாவில், மண்டல் கமிஷன் அமல்படுத்தப்படுவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. செப்டம்பர்6ல், எதிர்க்கட்சி தலைவர்ராஜிவ், மண்டல் கமினுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
'பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன; பிற்படுத்தப்பட்டோரை கண்டறியும் முறையும் சரியில்லை; இது ஒரு முழுமையான அறிக்கை அல்ல' என கடுமையாக எதிர்த்தார்.
இந்த ஒரு பேச்சை வைத்து, மண்டல் கமிஷனுக்கு ராஜிவ் எதிரானவர் என சொல்ல முடியாது என காங்கிரசார் சப்பைக் கட்டு கட்டினாலும், லோக்சபாவில் ராஜிவ் அன்று பேசியது, இன்றும் ஆவணமாக உள்ளது.
கவிழ்ந்த சிங் அரசு
இந்நிலையில், சிங் அரசுக்கு ஆதரவு தொடர்ந்தால், தங்களுடைய வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்படும் என்பதை, பா.ஜ., உணர்ந்து, ராமர் கோவில் விவகாரத்தை எழுப்பி, மக்களை திசை திருப்ப முயன்றது; அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார்.
சரியாக, 1990, அக்டோபரில், வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., விலக்கிக் கொண்டது. மெஜாரிட்டி இல்லாமல், நவம்பரில், சிங் அரசு கவிழ்ந்தது. பிற்படுத்தப்பட்டோர் முன்னேறக் காரணமானவர் என சிங் பெயரெடுத்தாலும், அந்த கமிஷனாலேயே அவர் ஆட்சி இழந்தார்.
சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி
கடைசியாக மண்டல் கமிஷன் விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. 1992, நவம்பர் 16ல், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. மண்டல் கமிஷனின் பரிந்துரையான, ஓ.பி.சி.,க்கு 27 சதவீத ஒதுக்கீட்டை, ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.
ஆனால், 'ஒட்டு மொத்த இட ஒதுக்கீடும் 50 சதவீதத்தை மீறக் கூடாது; 'கிரீமி லேயர்' என்கிற வசதி படைத்த ஓ.பி.சி.,க்களுக்கு இந்த இடஒதுக்கீட்டில் இடம் கிடையாது; அரசு வேலையில் ஆரம்பத்தில் சேரும்போது மட்டுமே ஓ.பி.சி.,க்கு இட ஒதுக்கீடு உண்டு; பதவி உயர்வில் கிடையாது'என தீர்ப்பளித்தது.
இப்படி நேரு, இந்திரா, ராஜிவ் என காலம் காலமாக, பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்த காங்கிரஸ், இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
'எத்தனை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்?' என, சமீபத்தில் கேள்வி எழுப்பினார் ராகுல். 'நாடு முழுதும் ஜாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றும் சொல்கிறார்.
திடீர் ஞானோதயத்துடன் கிளம்பி இருக்கும் ராகுலுக்கு, மண்டல் கமிஷன் என்ற விவகாரத்தின் பின்னணியே தெரியவில்லை என்றால், அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனெனில், உ.பி., பீஹார் போன்ற மாநிலங்களில், 'பப்பு' வேக வேண்டுமானால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தே ஆக வேண்டும். பா.ஜ.,வை எதிர்க்க, ராகுல் கையாளப் போகும் ஒரே அஸ்திரம் இதுதான்.
கவுண்டமணி சொன்னதுபோல, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
-- ஏ.வைத்தியநாதன்
பத்திரிகையாளர்
இ - மெயில்: