ADDED : ஏப் 21, 2024 04:27 AM

லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை; அன்று மதியமே யார் மத்தியில் ஆட்சி அமைக்கின்றனர் என்பது தெரிந்துவிடும். இதுவரை, வெளியான கருத்து கணிப்புகள் அனைத்துமே, மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என தெரிவித்துள்ளன.
'பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால் இரண்டு மாநில அரசுகள் கவிழ வாய்ப்புள்ளது' என, பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது; ஆனால், உள்குத்து அதிகம். சமீபத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளிக்க, காங்., வேட்பாளர் தோற்றார். இந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்; இவர்கள் தற்போது பா.ஜ.,வில் சேர்ந்து விட்டனர்.
தவிர, ஹிமாச்சல பிரதேச காங்., தலைவர் பிரதிபா சிங்கிற்கும், முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகுவிற்கும் ஏற்கனவே மோதல். இதற்கிடையே, சில காங்., தலைவர்கள் பா.ஜ.,வில் இணைந்து விட்டனர். எப்போது கவிழும் என, ஊசலாடிக் கொண்டிருக்கிறது காங்., ஆட்சி.
அடுத்து, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கும் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையே நல்ல உறவில்லை; இங்கும் சில தலைவர்கள் பா.ஜ., பக்கம் ஓடிவிட்டனர். பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த இரண்டு மாநில அரசுகளுக்கும் பெரும் பிரச்னை வரும் என்கின்றனர்.

