ADDED : ஜூலை 30, 2024 03:57 AM

சென்னை: 'உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பணியாற்றுங்கள்' என, கட்சி நிர்வாகிகளை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று காலை திண்டுக்கல்; மாலை திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் நடந்த நிகழ்வுகள் குறித்து, நிர்வாகிகள் கூறியதாவது:
'திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், மூன்றில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும், மிகக்குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளோம். ஓட்டு குறைந்ததற்கு காரணம் என்ன?' என்று, பழனிசாமி கேட்டார்.
அதற்கு நிர்வாகிகள், 'தேர்தலில் கடுமையாக உழைத்தோம்; ஆனால், வெற்றி பெற முடியவில்லை. எஸ்.டி.பி.ஐ., கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தும், சிறுபான்மையினர் நமக்கு ஓட்டளிக்கவில்லை' என்றனர்.
'சிறுபான்மையினர் ஓட்டு, கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். வரும் தேர்தலில் எல்லாம் சரியாகும். நீங்கள் தீவிரமாக கட்சி பணியாற்றுங்கள். மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம். அதை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.
'நிர்வாகிகள் அனைவரும் மாதந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்.
'உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பணியாற்றுங்கள். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும்' என, பழனிசாமி அறிவுரை வழங்கினார்.
இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலும், இதேபோல பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார். மாவட்ட செயலர்கள், தங்களுக்கு எதிராக பேசுவோர் எனக்கருதிய நபர்களை, கூட்டத்திற்கு அழைக்கவில்லை என, அனைத்து மாவட்டங்களிலும் புகைச்சல் எழுந்துள்ளது.