விடாது விரட்டும் எதிரிகள் தொல்லை: கேரளாவில் பழனிசாமி வளர்த்த யாகம்
விடாது விரட்டும் எதிரிகள் தொல்லை: கேரளாவில் பழனிசாமி வளர்த்த யாகம்
UPDATED : மே 01, 2024 10:36 AM
ADDED : மே 01, 2024 04:05 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். ஜோதிட கணிப்பில் இவருக்கு தற்போது, 6ல் சனி பகவான் உள்ளது. அதனால், அவருக்கு யோகமே பலன் என, ஜோதிடர்கள் பொதுவாக கூறுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவசரமாக கேரளா சென்ற பழனிசாமி அங்கு, வராஹி மற்றும் கால பைரவருக்கு வழிபாடு செய்ததோடு, யாக பூஜையிலும் பங்கேற்றுள்ளார்.
இதுகுறித்து, பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன், 2023 செப்., 27ல், ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா கனகதுர்கா கோவிலில், எதிரிகளை வீழ்த்துவதற்காக சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார் பழனிசாமி. லோக்சபா தேர்தலுக்கு பின்,கடந்த 24ல், சென்னையில், அ.தி.மு.க., மாவட்ட செயலர், தேர்தல் பணி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, தேர்தலில் சில இடங்களில் நிர்வாகிகள் சரிவர பணி செய்யவில்லை என்ற, தன் கோபத்தையும் வெளிப்படுத்தி பேசியுள்ளார்.
மறுநாள் சேலம் வந்த பழனிசாமி, இரண்டு நாட்களாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து, வெயில் அதிகமாக இருப்பதால், கட்சியினர் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று சொல்லி விட்டு, வீட்டில் ஓய்வெடுத்தார்.
நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில், சேலத்தில் இருந்து காரில் கோவை வழியாக, கேரள மாநிலம் வயநாட்டுக்கு சென்றார். அங்கிருக்கும் அம்மன் கோவிலில், வராஹி மற்றும் பைரவர் வழிபாடு நடத்தினார். கூடவே, குறிப்பிட்ட அந்த நாள் தேய்பிறை பஞ்சமி மற்றும் சஷ்டி நாளாக இருந்ததால், இரவு நேரத்தில் நடத்தப்பட்ட யாக பூஜையிலும் பங்கேற்றார். விடாது விரட்டும் எதிரிகள் தொல்லை மற்றும் நோய்கள் நீங்க தேய்பிறை பஞ்சமி நாளில் வழிபாடு செய்வதுடன், யாகம் நடத்தி பூஜையில் பங்கேற்பது நல்லது என்பதால், அதை செய்துள்ளார்.ஜோதிடர்கள் அறிவுரைப்படி நடத்தப்பட்டிருக்கும் யாக பூஜையை கேரள நம்பூதிரிகள் நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -