இபிஎஸ் எதிர்ப்பில் பதுங்கும் பன்னீர்செல்வம்: தனித்து இயங்க ஆதரவாளர்கள் புது திட்டம்
இபிஎஸ் எதிர்ப்பில் பதுங்கும் பன்னீர்செல்வம்: தனித்து இயங்க ஆதரவாளர்கள் புது திட்டம்
ADDED : ஏப் 28, 2024 01:30 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் எதிர்க்கும் விஷயத்தில், பன்னீர்செல்வம் உறுதியாக இல்லை என, அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கு முன், நடந்தவற்றை பட்டியலிட்டு புலம்பிவருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
அ.தி.மு.க.,வை தன் கரங்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் முயற்சிக்கு, பா.ஜ., துணை நின்றது. ஆனாலும், பன்னீர்செல்வத்தால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.
இருப்பினும், அவரையும், தினகரனையும் கூட்டணியில் சேர்த்து, லோக்சபா தேர்தலை சந்திக்க பா.ஜ., முடிவு செய்தது.
அபகரிப்பு
பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவுக்கு, பா.ஜ., கூட்டணியில், 13 தொகுதிகள் வரை தருவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
அதாவது, 13 தொகுதிகளில் பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிட வேண்டும் என, அண்ணாமலை விரும்பினார். 13 தொகுதிகளில் போட்டியிட்டு, இரட்டை இலை சின்னத்துக்கு பன்னீர்செல்வமும், 'பி பார்ம்' அளிக்கும் பட்சத்தில், ஏற்கனவே, 40 தொகுதிகளுக்கு பழனிசாமியும் பி பார்ம் அளித்தால், தேர்தல் கமிஷன் குழப்பத்தில், இருவருக்கும் இரட்டை இலை சின்னம் தராமல் முடக்கும் என்பதே திட்டம்.
ஆனால், 13 தொகுதிகளில் போட்டியிட தன்னிடம் போதுமான அளவுக்கு நிதி வசதியில்லை என, பன்னீர்செல்வம் மறுத்து விட்டார்.
இதையடுத்து, 'ஆறு தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள்' என்று அண்ணாமலை வலியுறுத்தினார். ஆனால், தன் மகன் ரவீந்திரநாத்துக்காக தேனி தொகுதியை மட்டும் விட்டுக் கொடுத்தால் போதும் என்றே, பன்னீர்செல்வம் கூறி வந்துள்ளார்.
இதனால், வெறுத்துப் போன அண்ணாமலை, தினகரனிடம் பேசினார். அவர் பன்னீர்செல்வம் குறித்து, சரியான மதிப்புடன் கருத்து சொல்லவில்லை. கூடவே, தான் போட்டியிட்டால் மட்டுமே, தேனி தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று கூறி, தொகுதியை உறுதி செய்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வமே போட்டியிட்டால், கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும் கூறி விட்டார். இதையடுத்தே, ராமநாதபுரம் தொகுதி பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது.
தொகுதி ஒதுக்கப்பட்டதும், இரட்டை இலை சின்னம் கேட்டு பன்னீர்செல்வம், தேர்தல் கமிஷனிடம் பி பார்ம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுயேச்சை சின்னம் கேட்டு பெற்றார்.
ஆதரவாளர்களான ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட பலரும், தேர்தல் கமிஷனை இரட்டை இலைக்காக அணுகுவது குறித்து கூறிய எந்த விஷயத்தையும், பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்ளவில்லை.
தொகுதி ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே, தனக்கான ஒரு குழுவினரோடு, ராமநாதபுரம் தொகுதிக்கு சென்ற பன்னீர்செல்வம், தன் குழுவில் நியமிக்கப்பட்ட மா.செ.,க்கள் 80 பேர் மற்றும் மாநில நிர்வாகிகளை, தேர்தல் பணியாற்ற ராமநாதபுரம் வரும்படி அழைக்கவில்லை.
தாமாக முன் வந்த பலருக்கும், பணிகள் ஒதுக்கிக் கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதால், வந்த சிலரும் நமக்கென்ன என்று, ஓரிரு நாளில் ஊர் திரும்பி விட்டனர்.
பன்னீர்செல்வத்தின் ஆலோசகர் போல செயல்படும் ஒரத்தநாடு வைத்திலிங்கம் கூட, ராமநாதபுரத்துக்கு தேர்தல் பணிக்காக வந்து, முழுமையாக பணியாற்றாமல் ஊருக்கு கிளம்பினார். அவர் இடத்தில் நின்று, ரத்தினசாமி மட்டும் பணியாற்றினார்.
தன் உறவுக்காரர்கள்,ஓரிரு கட்சிக்காரர்களை வைத்து, சுயேச்சை சின்னமான பலாப்பழத்தை தொகுதி முழுக்க கொண்டு சென்றார் பன்னீர்செல்வம். அவருக்கு அ.தி.மு.க., மற்றும் ஜாதிய ஓட்டுகள் முழுமையாக கிடைத்தாலும், அது வெற்றிக்கு போதுமானதா என்று தெரியவில்லை.
தேர்தல் பிரசாரம் முடிந்ததும், வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட பொருட்கள் ராமநாதபுரம் கொண்டு வரப்பட்டன.
ஆனால், தொகுதி முழுக்க பரிசு பொருட்கள் போய் சேரவில்லை. பரிசுப்பொருள் வினியோகிக்க ஆங்காங்கே நியமிக்கப்பட்ட முகவர்களே, அதை அபகரித்துக் கொண்டனரே தவிர, மக்களிடம் சேர்க்கவில்லை.
இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் அறிவித்த பின்பும், தேர்தல் கமிஷனை அணுகி இரட்டை இலையை கேட்டு விண்ணப்பம் கொடுக்கலாம் என்ற திட்டத்தையும், தன்னை சார்ந்தவர்களை செய்ய விடாமல் பன்னீர்செல்வம் தடுத்து விட்டார்.
தயக்கம்
பழனிசாமியோடு முழு திடத்துடன் பன்னீர்செல்வம் மோதவில்லை என்ற எண்ணம், அவரது ஆதரவு அ.தி.மு.க., தலைவர்களிடம் எழுந்து உள்ளது.
தேர்தலுக்கு பின், இது எப்படி செல்லும் என புரியாததால், அவரை நம்பி தொடர்ந்து பயணிக்க தயங்குகின்றனர். அதனால், பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அ.தி.மு.க., தலைவர்களை் ஒன்றிணைத்து, எதிராக போராட முடிவெடுத்து உள்ளனர்.
இதற்காக, பெங்களூரு புகழேந்தி தலைமையில் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகரன், கே.சி.பழனிசாமி ஆகியோர் அடிக்கடி பேசி, திட்டம் வகுக்கின்றனர். தேர்தல் முடிவுகளுக்கு பின், பன்னீர்செல்வம் குழுவினர் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

