டிஜிட்டல் தளங்களில் நிதியை வாரி இறைக்கும் கட்சிகள்
டிஜிட்டல் தளங்களில் நிதியை வாரி இறைக்கும் கட்சிகள்
UPDATED : ஏப் 12, 2024 12:16 PM
ADDED : ஏப் 12, 2024 05:59 AM

கோவை : லோக்சபா தேர்தல் பிரசாரம் நேரடியாக ஒரு புறம் அனல் பறக்க நடந்துவரும் அதே சமயத்தில், டிஜிட்டல் தளங்களில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு, விளம்பர பிரசாரங்களுக்கு நிதியை அள்ளி கொடுத்து வருகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறைகள் பெரும்பாலும், சோசியல் மீடியாக்களில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பிரசார கூட்டங்களில், பெரும்பாலும் இளைய தலைமுறைகளை பார்ப்பது சிரமம்.
இதனால், இளைய தலைமுறையினரை குறிவைத்து, டிஜிட்டல் தளங்களில் ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, கூகுள் விளம்பர பிரிவில் மட்டும் கடந்த, பிப்., 1ம் தேதி முதல் ஏப்., 11ம் தேதி வரை, அரசியல் பிரிவில், 110 கோடி ரூபாய்க்கு 94,368 விளம்பரங்கள் டெக்ஸ்ட், படம் மற்றும் விளம்பரம் என்ற மூன்று பிரிவுகளில் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும், 15 கோடி ரூபாய், 35,835 விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.
தேசிய அளவில் பா.ஜ., கட்சியும், தமிழகத்தில் தி.மு.க., கட்சியும் டிஜிட்டல் விளம்பர செலவினங்களில் முன்னணியில் உள்ளன.
இதில், பா.ஜ., கட்சி இதுவரை 39 கோடி ரூபாயும், தி.மு.க., 10 கோடி ரூபாயும், காங்கிரஸ் 9 கோடி ரூபாயும் டிஜிட்டல் விளம்பரங்களுக்காக செலவிட்டுள்ளன. பிற கட்சிகளை ஒப்பிடும் போது, அ.தி.மு.க., டிஜிட்டல் தள பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்று தெரிகிறது.
டெக்ஸ்ட், படம், வீடியோ என்ற மூன்று பிரிவுகள் கூகுள் விளம்பர பிரிவில் இருந்தாலும், வீடியோ வடிவில் யூடியூப் தளங்களில் தான், 80 சதவீத விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் பிரிவில், கூகுள் விளம்பர பிரிவில் மட்டும் இத்தனை கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

