கட்சி மாறும் எம்.எல்.ஏ.,க்களுக்கு பென்ஷன் கட்: ஹிமாச்சலில் சட்டம்
கட்சி மாறும் எம்.எல்.ஏ.,க்களுக்கு பென்ஷன் கட்: ஹிமாச்சலில் சட்டம்
ADDED : செப் 05, 2024 12:32 AM

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் மற்ற கட்சிக்குத் தாவி தகுதி நீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஓய்வூதியத்தை ரத்து செய்யும் மசோதா அம்மாநில சட்டசபையில் நேற்று நிறைவேறியது.
ஹிமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ஹிமாச்சல பிரதேச சட்டசபை உறுப்பினர்கள் அகவிலைப் படி மற்றும் ஓய்வூதிய சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்தார்.
இந்த சட்டத்திருத்தம், நாட்டில் இதுவரை எங்கும் இல்லாத வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படும் எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியத்தை நிறுத்துகிறது. இந்த மசோதா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
ஹிமாச்சல் காங்கிரசை சேர்ந்த சுதிர் சர்மா, ரவி தாக்குர் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கடந்த பிப்ரவரியில் நடந்த ராஜ்யசபா எம்.பி.,க்கான தேர்தலில், பா.ஜ.,வின் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இவர்கள் பட்ஜெட் தாக்கல் மற்றும் வெட்டுத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது கொறடா உத்தரவை மீறி அவைக்கு வராததால் தகுதி நீக்கப்பட்டனர்.
இந்த புதிய சட்டத்தால் தகுதி நீக்கப்பட்ட இந்த ஆறு எம்.எல்.ஏ.,க் களுக்கும் பென்ஷன் கிடைக்காது.