sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அரசியல்வாதி  +  ஆட்சியாளர்  +  மக்கள்  +  காவல்துறை = சட்டம் - ஒழுங்கு!

/

அரசியல்வாதி  +  ஆட்சியாளர்  +  மக்கள்  +  காவல்துறை = சட்டம் - ஒழுங்கு!

அரசியல்வாதி  +  ஆட்சியாளர்  +  மக்கள்  +  காவல்துறை = சட்டம் - ஒழுங்கு!

அரசியல்வாதி  +  ஆட்சியாளர்  +  மக்கள்  +  காவல்துறை = சட்டம் - ஒழுங்கு!

1


UPDATED : ஜூலை 12, 2024 05:15 AM

ADDED : ஜூலை 11, 2024 11:48 PM

Google News

UPDATED : ஜூலை 12, 2024 05:15 AM ADDED : ஜூலை 11, 2024 11:48 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஒரு பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கும் உன்னால், அந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால், பிரச்னையே நீதான்' என்கிறார் ஒரு அறிஞர்.

சட்டம் - ஒழுங்கு என்பது, சமுதாயம் சம்பந்தப்பட்ட விஷயம். சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்கிற ஒவ்வொருவருக்கும், அதில் பங்கு இருக்கிறது.

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்திவிட்டோம் அத்துடன் எங்களுடைய பொறுப்பு முடிந்துவிட்டது என்று, மக்களோ, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசோ கைகழுவி விட முடியாது.

காரணம், காவல்துறை பணிக்கு நியமிக்கப்படுபவர்கள், வேற்று கிரக அமானுஷ்ய சக்திகள் அல்ல; இந்த சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுத்து, உரிய பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் தான்.

அவர்கள் தங்கள் பணியில் மெத்தனமாக இருந்தால், அலட்சியமாக செயல்பட்டால், அதைச் சுட்டிக்காட்டவும், தட்டிக் கேட்கவும், தேவைப்பட்டால் தண்டனை நடவடிக்கை எடுக்கவும், அவர்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள் இருக்கின்றனர்.

அவர்கள் கவனத்துக்கு அதைக் கொண்டு செல்லும் உரிமையும் பொறுப்பும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டின், ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது.

இதைத்தான், மாவீரன் நெப்போலியன், 'இந்த சமுதாயம் கெடுவதற்கு, தீயவர்களின் வன்முறை மட்டும் காரணமில்லை; அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள் சாதிக்கும் மவுனமும் தான்' என்று கூறியிருக்கிறார்.

சட்டம் என்றால் என்ன?


உடல், பொருள் ஆவி என்ற அனைத்தையும் அர்ப்பணித்து, நம் முன்னோர் பெற்றுத் தந்த இந்த சுதந்திரத்தை, முழுமையாக அனுபவிக்க இயலாத அளவுக்கு, இத்தனை சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள் எதற்காக? ஒருவர் அனுபவிக்கும் தனிமனித சுதந்திரம், அடுத்தவருடைய சுதந்திரத்தை பாதிக்கக் கூடாது என்பதற்காக!

உன் கையை நீட்டுவதற்கான உன் சுதந்திரம், அடுத்தவன் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் முடிந்து விடுகிறது.

ஆகவே சுதந்திரத்தை எல்லாரும் சமமாக உபயோகிக்க வேண்டும் என்பதற்காகவே இயற்றப்பட்டவை தான் சட்டங்கள். அதை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் கூட, ஆட்சியாளர்கள், எதிரணி அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி காவல்துறையால் சாத்தியப்படாது.

ஒழுங்கு என்றால் என்ன?


சமுதாயத்தால் சரியானதென்றும், சமுதாய நலனுக்கு உகந்ததென்றும், தனிமனிதன் மற்றும் மாபெரும் கூட்டத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டு, சரியான முறையில் நடைபெறும் நடவடிக்கைகள்.

பொது இடத்தில் ஆபாசமாக பேசுவது, அருவருப்பான முறையில் நடந்து கொள்வது என துவங்கி, வரிசையாக செல்ல வேண்டிய இடத்தில் முண்டியடிப்பது, முறையாக முன் நிற்பவர்களைத் தாண்டிச் செல்வது உட்பட அனைத்துமே, ஒழுங்கீன நடவடிக்கைகள் தான். அவற்றையும் தடுக்க வேண்டிய பொறுப்பு, காவல்துறைக்கு உள்ளது.

இந்தப் பணியில், காவல்துறையினர் மெத்தனம் காட்டும்போது, அது சட்டம் மீறிய குற்ற நிகழ்வாக மாறி, சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் ஆபத்து இருக்கிறது.

ஆபாசமாக திட்டியவனை காவல்துறை தட்டிக் கேட்காவிட்டால், திட்டு பட்டவன் திட்டியவனை வெட்டி வீழ்த்தவும் வாய்ப்பிருக்கிறது; கூட்டத்தை ஒழுங்குபடுத்தத் தவறினால், நெரிசல் ஏற்பட்டு, உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகவே எந்த ஒரு சிறு நிகழ்வையும் அற்பமென்று ஒதுக்கித் தள்ளாத மனநிலை, காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு வேண்டும். அதுவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனப்படும்.

இதைக் குறித்த காலத்தில் சரியாகச் செய்ய, நிலையப் பொறுப்பு அதிகாரிக்கு, அவர் நிலைய எல்லையில் வசிக்கும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். அந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, அவர் தன் கீழ் பணியாற்றுபவர்களின் திறமையை, முழுதுமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தன் பகுதி வாழ் மக்கள் மட்டுமின்றி, தன்கீழ் பணிபுரியும் அலுவலர்களுடன் கூட, நிலையப் பொறுப்பு அதிகாரி அதிக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய சிறப்பான பணி தான், கள்ளக்குறிச்சி மற்றும் சமீபத்திய கட்சித் தலைவர் கொலை போன்ற, காவல்துறைக்கு களங்கம் கற்பிக்கும் நிகழ்வுகளைத் தடுக்கும்.

Image 1292528


சவால்கள்


சமூக விரோதிகள் குறித்த தகவல்களைச் சேகரித்தல், உளவுத்துறையின் கடமை என்றாலும், தகவல்களைக் கொடுக்கும் மக்கள் காட்டும் தயக்கம், குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியமளிப்பதில் காட்டும் அக்கறையின்மை ஆகியவை, காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள்.

சட்டத்தை அமல்படுத்தும் காவல்துறையினரிடையே, திறமையின்மை, மெத்தனம், நேர்மையின்மை இவை சிறிதும் இல்லை; எல்லாருமே திறமையானவர்கள், நேர்மையானவர்கள் என்று சொல்வதற்கில்லை.

ஆனால் ஒரு சிலரின் அல்லது ஒரு பகுதியினரின் நேர்மையின்மை, திறமையின்மையை வைத்து ஒட்டுமொத்தமாக காவல்துறையை சாடுவது அத்துறையினரின் உற்சாகத்தை பாதிக்கும்.

எத்தனை குற்றங்கள் நிகழ்ந்தது என்று கணக்கிடும் நாம் எத்தனை குற்றங்கள் தடுக்கப்பட்டது என்பதை கணக்கிடுவதில்லை கணக்கிடவும் முடியாது.

மேலும் குற்றங்கள் அதிகமாவதற்கு முதன்மையான காரணம், மக்கள் தொகைப் பெருக்கம், சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் மாற்றம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி.

வறுமை மற்றும் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக குற்றங்கள் நிகழ்ந்த சூழ்நிலைகள், தற்போது கிடையாது. ஆடம்பர வாழ்க்கைக்கும், தேவைக்கு அதிகமாக சொத்துக்களைக் குவிக்கும் பேராசையிலுமே, குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

பொதுவாகவே எந்த ஒரு குற்ற நிகழ்வுக்கும் பின்னணியில் ஏதோ ஒரு வகையில், மண், பெண் அல்லது பொன் தான் காரணமாக இருக்கும்.

பொன் என்பது பணம் சம்பந்தப்பட்ட பிரச்னையை தான் குறிக்கிறது.

முக்கியமாக பொருளாதார வளர்ச்சியில், நிலங்களின் விலையேற்றம், பெரிய அளவிலான பணப்பரிமாற்றம் ஆகியவற்றில், சம்பந்தப்பட்டவர்களிடையே எழும் பிரச்னைகளை பொதுவாக நின்று தீர்த்தும் வைக்கும் பணியைச் செய்ய, காவல்துறைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள், ஆண்டுக்கணக்கில் வாய்தாவில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. எனவே நீதிமன்றத்தை நாடும் எண்ணம், உடனடி தீர்வை நாடவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு வராது. அவர்களுக்கு உள்ள ஒரே வழி, செல்வாக்கு மிக்க வன்முறையாளர்களின் உதவியை நாடுவதுதான்.

பாரம்பரிய கதையான, குரங்கு அப்பத்தை பங்கிட்ட கதையைப் போல், போனது போக, கிடைத்ததை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

நீதிமன்றத்தில் சரண்


இதனால்தான் ஆங்காங்கே, ரவுடிகள் என்று தங்களைத் தாங்களே சிலர் பிரகடனப்படுத்திக் கொண்டு, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். வருமானமிக்க தொழிலில் போட்டிகள் எழுவது சகஜம்; அப்படி உருவாகி, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்கின்றனர்.

ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டாலே, வாழ்க்கை நிலைகுலைந்து விடும் நிலை மாறி, பத்து வழக்குகள் இருந்தாலும், பந்தாவாக வெளியில் உலாவர முடிகிறது என்றால், வழக்குகள் சம்பிரதாய சடங்காகி விட்டன என்று தான் தோன்றுகிறது.

ஒவ்வொரு வழக்கிலும், வக்கீல்களும், நீதிபதிகளும் அவர்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வரும்போது, குற்றவாளியும், பாதிக்கப்பட்டவரும் இயற்கை மரணத்தையே எட்டிவிடுவர்.

பல ஆண்டுகள் கழித்து வழக்கு விசாரணைக்கு வரும்போது, விசாரணை செய்த அதிகாரி, அவ்வழக்கு பற்றிய விபரங்களை மறந்து போயிருப்பார்; சாட்சிகள், மறக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பர். வழக்கின் முடிவு நாம் அறிந்ததே!

அதனால்தான், குற்றவாளிகள் காவல்துறைக்கு எவ்வித சிரமமும் கொடுக்காமல் நீதிமன்றத்தில் சரண் அடைகின்றனர்.

இது ஒரு நல்ல சமுதாயசூழல் அல்ல. சில கொடூரமான குற்றவாளிகளின் ஆட்டம், 'என்கவுன்டர்' என்ற நிகழ்வுகளில் முடிவடைந்து விடுகிறது. அவை, நிகழ்ந்ததா, நிகழ்த்தப்பட்டதா என்ற வினாவுக்கு விடையளிக்க இயலாத சம்பவங்கள்.

தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்கள், தற்போதைய பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, காவல்துறையின் அதிகாரங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களுக்கு இந்தியில் பெயர்கொடுத்தது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஐ.பி.சி., - சி.ஆர்.பி.சி., - ஐ.இ.ஏ., என்ற பெயர் சுருக்கங்கள், நீண்ட நெடும் காலமாக வழக்கறிஞர்களாலும், நீதிபதிகளாலும் மற்றும் நீதிமன்ற பதிவேடுகளை பராமரிப்பவர்களாலும் பயன்படுத்தப்பட்டு, மனதில் ஊன்றியவை. தற்போதைய மாற்றம், வழக்குகளைத் தாமதப்படுத்தி விடும்.

முந்தைய சி.ஆர்.பி.சி., பிரிவு 149, புதிய பி.என்.எஸ்.எஸ்., பிரிவு 168 ஆக மாற்றப்பட்டுள்ளது என்றாலும், உள்ளடக்கத்தில் எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எந்த காவல்துறை அதிகாரியும், ஒரு பிடியாணையும் தேவையில்லாத குற்ற நிகழ்வைத் தடுக்க, தன்னால் இயன்றவரை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இயன்ற வரையிலான தலையீடு என்பது, 'சட்டப்படியான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு' என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டது தான்.

எனவே இருதரப்பு பிரச்னையை முதல்கட்டமாக விசாரித்து அவர்களுக்குள் சுமுகமான தீர்வை எட்ட, காவல் அதிகாரி உதவியாக இருக்கலாமே தவிர, அதிகாரியின் சுய விருப்பத்துக்கு இங்கு இடமில்லை.

அவரது நோக்கம், ஒரு பகைமை, தன் அதிகார எல்லையில் உருவாகி, பின்னால் ஒரு விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதுதான்.

இது கட்டப்பஞ்சாயத்து அல்ல; குற்றத்தடுப்பு நடவடிக்கை. இயலாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தலாம்.

மாறாக மனுவையே வாங்காமல் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்போது, காவல்துறை மீது அதிருப்தி ஏற்படுத்துவதுடன், மூன்றாவது நபரான ஒரு வன்முறையாளரின் தலையீட்டுக்கும் வழிவகுக்கும்.

சாதனை படைக்கும்


ஒரு தனி நபரோ அல்லது நபர்களோ, அங்கு வாழும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி பிரபல ரவுடி என்ற பெயரில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால், அந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, தன் கடமையைச் செய்யத் தவறி விட்டார் என்றுதான் பொருள்; அங்கு பணியில் தொடரும் தகுதி அவருக்கு இல்லை.

ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும், தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும், எதிரணியில் இருப்பவர்களும், அதிக அளவில் தோன்றியுள்ள பொதுசேவை இயக்கங்களும், ஒவ்வொரு சிறிய பிரச்னையையும் கையிலெடுத்துக் கொண்டு, தேவைக்கு அதிகமாகக் குரல் கொடுப்பது, போராட்டம், மாநாடு, பேரணி என்று நிகழ்த்தி, வரம்பு மீறி செயல்படுவது, காவல்துறைக்கு மிகப்பெரிய சவால்.

தன் தொண்டர்களை அதிக அளவில் கூட்ட முடிந்த தலைவர்களால், அவர்களைக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை; அதனால் தேவைக்கு அதிகமாகக் காவல்துறையினரை குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இதனால் காவல் துறையினர் தங்களின் அடிப்படை வேலைகளை, முக்கிய பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தற்போது மாநகரக்காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ்., அருண், அண்ணாநகர் துணை ஆணையராக இருந்தபோது, நான் அவரிடம் உதவி ஆணையராக பணிபுரிந்தேன். அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு, சிறந்த காவல் நிலையம் என்ற பாராட்டும், ஐ.எஸ்.ஓ., சான்றிதழும் கிடைத்தது.

சிறப்பாக பணிபுரிபவர்களை ஊக்குவித்துப் பாராட்டும் திறமைமிக்கவர்.

அவரது தலைமையின் கீழ், சென்னை மாநகர காவல்துறை, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில், சாதனை படைக்கும் என்று நம்பலாம்.

மா.கருணாநிதி.

காவல்துறை

கண்காணிப்பாளர் (ஓய்வு)

இ-மெயில்: spkaruna @gmail.com






      Dinamalar
      Follow us