அதிருப்தியாளர்களுக்கு பதவி: இ.பி.எஸ்., அதிரடி திட்டம்
அதிருப்தியாளர்களுக்கு பதவி: இ.பி.எஸ்., அதிரடி திட்டம்
ADDED : செப் 11, 2024 01:27 AM

லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து, தொகுதிவாரியாக நிர்வாகிகளை அழைத்து, பொதுச்செயலர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, பல மாவட்டங்களில் நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மீது சரமாரியாக புகார்களை தெரிவித்தனர்.
இதை எதிர்பார்க்காத பழனிசாமி, அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் மா.செ.,க்கள் மீது புகார் தெரிவிக்க தன் ஆதரவாளர்கள் வாயிலாக தடை போட்டார்.
இதையடுத்து, மாவட்டச் செயலர் மீது அதிருப்தியில் உள்ளவர்கள், புகாரை மனுவாக தயார் செய்து அதை கட்சி தலைமைக்கு அனுப்பியபடி உள்ளனர்.
அதற்கு பின்னும், தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது, கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காதது, மற்ற நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டச் செயலர்களும் தங்களுக்கு போட்டியாக கருதும் நபர்களுக்கு, பதவிகள் வழங்காமல், அவர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை இழுக்க நடிகர் விஜய் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உட்பட பலரிடம், விஜய் தரப்பில் பேச்சு நடந்து உள்ளது.
இதனால், மாவட்டச் செயலர்கள் மட்டுமின்றி, அதிருப்தியில் உள்ளவர்களையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தொடர்ந்து தேர்தலில் தோல்வியை சந்தித்து வருவதால், கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மாவட்டச் செயலர்களை மாற்றினால், கட்சியில் வீண் குழப்பம் ஏற்படும். எனவே, அவர்களை நீக்கும் எண்ணத்தை, கட்சி தலைமை கைவிட்டுள்ளது.
அதேநேரம், புதிதாக சில மாவட்டங்களைப் பிரித்து, அதிருப்தியாளர்களுக்கு பதவிகள் வழங்க பழனிசாமி திட்டமிட்டு உள்ளார்.
மேலும், ஒவ்வொரு அணியிலும், புதிய பதவிகளை உருவாக்கி, அதிருப்தியில் உள்ளவர்களை அவற்றில் வரிசையாக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார். அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்வுகள் முடிந்ததும், இம்மாத இறுதியில் இப்பணி துவக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -