UPDATED : ஏப் 10, 2024 03:32 AM
ADDED : ஏப் 10, 2024 01:09 AM

ஒரு கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், உடனடியாக மற்றொரு கட்சிக்கு மாறுவது என்ற, சாணக்கியர்கூட சொல்லித்தராத அரசியல் தத்துவம் தற்போது பரவலாகிவிட்டது.
அவ்வாறு மற்றொரு கட்சியில் இருந்து வருபவருக்கு, புதிய கட்சியில் உடனடியாக வாய்ப்பு தரப்படுவது அரசியலில் சாதாரணமாகிவிட்டது.
கடும் போட்டி
மொத்தம், 25 தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில், இவ்வாறு பல கட்சி மாறியவர்கள் போட்டியிடுகின்றனர். அதிலும் ஒரு சிலருக்கு, கட்சி மாறிய சில நிமிடங்களில் சீட் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில், கடந்த இரண்டு தேர்தல்களில், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வென்றது.
இந்த முறை கடும் போட்டி கொடுக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்ததால், விட்டதை பிடிக்க காங்கிரஸ் முழு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதற்காக, பழங்குடியினருக்காக போராடும் பாரதிய ஆதிவாசி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். தொகுதிப் பங்கீடும் முடிந்துவிட்டது.
இதையடுத்து ஏற்கனவே பல தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த பாரதிய ஆதிவாதி கட்சி வேட்பாளர்களை திரும்பப் பெற்றுள்ளது.
ஒரு லோக்சபா தொகுதி மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கு நடக்கும் இடைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரசில் இருந்து வந்த மகேந்திரஜீத் சிங் மால்வியாவை, பன்ஸ்வாரா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சரான இவர், நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்கு பாரதிய ஆதிவாசி கட்சி வேட்பாளரை அவர் சந்திக்கிறார்.
அதுபோல, காங்கிரசில் இருந்து வந்த டாக்டர் ஜோதி மிர்தாவை, நாகோர் தொகுதியில் பா.ஜ., நிறுத்தியுள்ளது. பா.ஜ.,வில் சீட் கிடைக்காததால் வெளியேறிய பிரகலாத் குஞ்சாலை, கோட்டா தொகுதியில் காங்., நிறுத்தியுள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை அவர் எதிர்க்க உள்ளார்.
இதுபோல், சீட் கிடைக்காததால், தோளில் இருந்த துண்டை மாற்றி, பா.ஜ.,வில் இருந்து வந்த ராகுல் கஸ்வான், சுரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பார்மர் தொகுதி
ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியில் இருந்து வந்த உமேதா ராம் பெனிவாலை, பார்மர் தொகுதியில் காங்., நிறுத்தியுள்ளது.
இவ்வாறு மிகப் பெரிய பட்டியலே இங்கு உள்ளது.
அதுபோல, பல வேட்பாளர்களுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பான வழக்குகளும் உள்ளன.
காதல் மற்றும் போரில், எது செய்தாலும் அது நியாயம்தான். அது அரசியலுக்கும் பொருந்தி வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -

