கடைமடையிலிருந்து 922 ஏரிகளுக்கு காவிரி நீரை திருப்பி விட திட்டம்
கடைமடையிலிருந்து 922 ஏரிகளுக்கு காவிரி நீரை திருப்பி விட திட்டம்
UPDATED : ஆக 10, 2024 02:48 AM
ADDED : ஆக 10, 2024 01:02 AM

சென்னை:கடைமடைப் பகுதிகளில் இருந்து பின்னோக்கி நீரை திருப்பி, காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள, 922 ஏரிகளை நிரப்பும் பணியை, நீர்வளத்துறை துவக்கிஉள்ளது.
டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. இதிலிருந்து திறக்கப்படும் நீர், தஞ்சாவூர் கல்லணைக்கு செல்கிறது.
அங்கிருந்து, காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகள் வழியாக, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. டெல்டா உட்பட காவிரி பாசன பகுதிகளில், 922 ஏரிகள் உள்ளன.
கல்லணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு, காவிரி பாசனப் பகுதிகளின் முன்பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்பினால், கடைமடைப் பகுதிக்கு, குறித்த காலத்திற்குள் சென்று சேராது.
ஆறு மற்றும் பிரதான கால்வாய்களில் செல்லும் நீர், கிளைக் கால்வாய்களுக்கு பிரிந்து செல்லாமல் சீராக கடைமடை வரை செல்லும் வகையில், சிறிய அளவு ஷட்டர்கள் கொண்ட ரெகுலேட்டர்கள், தேவைப்படும் இடங்களில் கட்டப்பட்டு உள்ளன.
கடைமடை பகுதியில், கடல்நீர் ஊடுருவலைத் தடுப்பதற்கும் இந்த ரெகுலேட்டர்கள் உதவுகின்றன.
காவிரி நீர் தற்போது கடைமடைப் பகுதியை அடைந்துள்ள நிலையில், அங்குள்ள ரெகுலேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், நீர் பின்னோக்கி, வந்த வழியே செல்கிறது.
இந்த இயற்கை உக்தி யைப் பயன்படுத்தி, கிளை ஆறுகள், கால்வாய் ரெகுலேட்டர்கள் திறக்கப் பட்டு, பாசனப் பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்பும் பணிகளை, நீர்வளத்துறை துவக்கியுள்ளது.
இந்த உக்தியின்படி தற்போது ஆறு ஏரிகள் மட்டுமே முழுகொள்ளளவுக்கு நிரம்பியுள்ளன.
மேலும் ஏழு ஏரிகளில் 75 - 100 சதவீதம்; 20 ஏரிகளில் 50 - 75 சதவீதம்; 45 ஏரிகளில் 25 - 50 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன.
அதே நேரத்தில், 687 ஏரிகள், 25 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளன. நீர்வரத்து இன்னும் துவங்காததால், 157 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு, 1,454 கன அடி, வெண்ணாற்றில், 1,452, கல்லணை கால்வாயில், 1,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த நீரை கடைமடைப் பகுதிகள் வரை அனுப்பி, பின்னோக்கி திருப்பி ஏரிகளை நிரப்பும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், கரைகளில் உடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேர்வதும் உறுதி செய்யப்படும்.
அதுமட்டுமின்றி கொள்ளிடம் ஆற்றில் இருந்து, வடவாறு கால்வாய் வாயிலாக நீர் திறக்கப்பட்டு, கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியை நிரப்பும் பணிகளும் துவங்கிஉள்ளன.
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு வினாடிக்கு, 596 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

