ஓய்வூதிய கோரிக்கைக்காக வலுப்பெறும் போராட்டங்கள்; சங்கங்களை சமாளிப்பது அரசுக்கு சவால்
ஓய்வூதிய கோரிக்கைக்காக வலுப்பெறும் போராட்டங்கள்; சங்கங்களை சமாளிப்பது அரசுக்கு சவால்
ADDED : பிப் 27, 2025 09:05 AM

மதுரை; ஓய்வூதிய கோரிக்கைகளுக்காக தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் தன்னெழுச்சியாக பங்கேற்றன. இப்போராட்டம் 2026 தேர்தலை எதிர்நோக்கி இன்னும் தீவிரமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என, ஊழியர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு, அகவிலைப்படி நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இவையெல்லாம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உரியவை. இதற்காக 2003 முதல் ஜாக்டோ ஜியோ என்ற அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக போராடி வருகிறது.
இதுபோல பல அரசு ஊழியர்கள் அமைப்பு சேர்ந்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் என்ற பெயரிலும் போராடி வருகின்றன. மேலும் துறைரீதியான பல நுாறு சங்கங்களும் தங்கள் கோரிக்கைக்காக போராடும்போது, ஓய்வூதிய கோரிக்கையையும் வலியுறுத்துகின்றன. இப்படி பல ஆண்டுகளாக போராடியும் எந்தப் பலனும் இல்லை.
சங்கங்களின் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அ.தி.மு.க.,- தி.மு.க., ஆட்சிகளின்போது இதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிடுகின்றன. அறிவிப்போடு சரி. அக்குழு செயல்பட்டதா இல்லையா என்று பார்ப்பதில்லை. இதனால் ஓய்வூதிய கோரிக்கைக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஜாக்டோஜியோ, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், வருவாய்த்துறை கூட்டமைப்பு என சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஐகோர்ட் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டத்துடன் கலைந்தனர்.
சாதாரணமாக துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் சங்கங்கள் அனைத்தும் தன்னெழுச்சியாக பங்கேற்றன. இதில் மாநில அளவில் ஆசிரியர்கள் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், அரசு ஊழியர்கள் 21ஆயிரத்துக்கும் மேலாகவும் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அதிகளவாக 1104 பேர் பங்கேற்றனர். இதனால் மதுரை கலெக்டர் அலுவலக வளாகமே போராட்ட களமாக காட்சியளித்தது. தேர்தல் நெருங்குவதால் வருங்காலங்களில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பதாக அறிவித்ததை எந்த சங்கமும் நம்பவில்லை. இதனால் அவர்களை தேர்தல் வரை சமாளிப்பது அரசுக்கு சவாலாகவே இருக்கும். நேற்றைய போராட்டம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.
வருவாய்த்துறை பதவி உயர்வு சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: மதுரையில் வருவாய்த்துறை கூட்டமைப்பு உருவாகி, அனைத்து சங்கங்களும் ஒரே நாளில் போராடினால்தான் பலன் கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்தது.
ஓய்வூதியம் பொதுவான கோரிக்கை என்பதால் பொது சங்கங்களில் இல்லாத அமைப்பினரும் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டதால் அலுவலகங்கள் காலியாக கிடந்தன. இந்த எழுச்சியால் கோரிக்கையை வெல்லலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்து வரும் தொடர் வேலை நிறுத்தங்களிலும் அனைத்து சங்கங்களும் இணைந்து போராட வேண்டும் என்றார்.