அதல பாதாளத்துக்கு போகுது நிலத்தடி நீர் மட்டம்; ஆழ்துளை கிணறுகளின் விதிமீறல் உச்சக்கட்டம்!
அதல பாதாளத்துக்கு போகுது நிலத்தடி நீர் மட்டம்; ஆழ்துளை கிணறுகளின் விதிமீறல் உச்சக்கட்டம்!
UPDATED : மார் 28, 2024 06:18 AM
ADDED : மார் 28, 2024 05:16 AM

கோவை மாவட்டத்தில் எந்தவொரு அனுமதியுமின்றி, ஆழ்துளை கிணறுகள் அளவுக்கு அதிகமாக அமைக்கப்பட்டு வருவது, நிலத்தடி நீர் மட்டத்தை கடுமையாக பாதித்து வருகிறது.
நொய்யல் நதி சீரழிந்து, கடந்த 2003ல் கோவையில் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்ட போதுதான், இந்த நதியைக் காப்பதற்கு 'சிறுதுளி' அமைப்பு களம் இறங்கியது.
தொடர் முயற்சிகளால், நொய்யல் நதியும், அவை சார்ந்த நீர்நிலைகளும் மீட்கப்பட்டன. இந்த கோடையிலும், கோவையில் ஒன்பது குளங்களில் தண்ணீர் இருப்பதால் தான், நகரின் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
குளங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில், 50 அடி ஆழத்திலேயே தண்ணீர் வருகிறது. நீர்நிலைகள் அருகில் இல்லாத பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில், ஆயிரம் அடிக்கு ஆழ்துளை அமைத்தாலும், வெறும் காற்று தான் வருகிறது.
நிலத்தடி நீர் குறைகிறது!
வீரகேரளம், வடவள்ளி, பி.என்.புதுார், கோவைப்புதுார், காளப்பட்டி போன்ற பல பகுதிகளில், ஆண்டுக்கு ஆண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.
அருகில் நீர் நிலைகள் இல்லாதது மட்டுமின்றி, அருகருகே அளவுக்கு அதிகமாக ஆழ்துளை போடுவதும், முக்கியக் காரணமாக உள்ளது.
சமீபகாலமாக கோவை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், விவசாயம் மற்றும் குடியிருப்புக்குப் போட்ட, போர்வெல்களில் லாரிகளில் தண்ணீர் எடுத்து விற்கப்படுகிறது.
2018ல், இதேபோல கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், இதே அத்துமீறல் அதிகமாக நடந்தது. அதை எதிர்த்து பொது நலமனு (எண்: 21160/2018) தாக்கல் செய்யப்பட்டு, 97 நிறுவனங்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இப்போது போர்வெல் போடுவோர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகமாகிவிட்ட நிலையில், எந்தத் துறை அதிகாரியும் கண்டு கொள்வதில்லை.
அனுமதியின்றி பயன்படுத்தினால், அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்த விதிமுறைகளை யாருமே மதிப்பதில்லை.
வீட்டுக்கு வீடு போர்வெல்!
பேரூர் செட்டிபாளையம் கிராம ஊராட்சியில், ராமசாமி நகரில் ஓய்வு பெற்றோர் குடியிருப்பு வளாகங்களுக்குள், பொது போர்வெல் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது அதற்கு அருகில், புதிதாக மேம்படுத்தப்படும் ஒரு லே அவுட்டில், புரமோட்டரால் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக, 20க்கும் அதிகமாக போர்வெல் போடப்படுகிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்புகளில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதுடன், கடுமையான சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மனையிடத்துக்கும், ஒரு போர்வெல் அமைத்து வீடுகளை விற்பது, வணிக ரீதியான பயன்பாடாகவே கருதப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் ஆளும்கட்சியின் ஆதரவுடன், இந்த அத்துமீறல் நடக்கிறது.
பூகம்பம் ஏற்படும் அபாயம்
இதே நிலை தொடர்ந்தால், கோவையில் நிலத்தடி நீர் மட்டம் இன்னும் அதல பாதாளத்துக்குச் சென்று விடும்; பூமிக்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் தரப்படுவதால், பூகம்ப பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, புவியியல் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் மீண்டும் கோர்ட் தலையிட்டு, உத்தரவிடும் முன், கலெக்டரே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிப்பது நல்லது.
நடவடிக்கை எடுக்கப்படும்
''ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு, நீர் வள ஆதாரத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், போர்வெல் அமைப்பதற்கு தடையும் உள்ளது. பேரூர் செட்டிபாளையம் கிராம ஊராட்சியில், விதிகளை மீறி அருகருகே போர்வெல் போடுவதாக, வந்துள்ள புகார் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.''
-கிராந்திகுமார், கோவை கலெக்டர்

