ADDED : மே 08, 2024 03:01 AM

இளநீர், பதநீர், நன்னாரி சர்பத், லஸ்ஸி, மண்பானைத் தண்ணீர், வண்ண வண்ணமாய் குளிர் பானங்கள்... கொதிக்கும் கோடைக்கு எதைக் குடித்தால் தாகம் தீருமென்று நம் தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
வாய் பேசத்தெரியாத குழந்தையும் கூட அழுது, தன் தேவையைத் தீர்த்துக் கொள்கிறது; வீட்டிலே நாம் வளர்க்கும் நாய், பூனை, ஆடு, மாடுகளுக்கும் நேரத்துக்கு உணவும் தண்ணீரும் கிடைத்து விடுகிறது. ஆனால் தெருநாய்களுக்கும், கைவிடப்பட்ட குதிரைகளுக்கும், வறண்ட வானத்திலே வலம் வரும் பறவைகளுக்கும் யார் தாகம் தீர்ப்பது...
கண்ணுக்கெட்டிய துாரம் வரை காடும் காய்ந்து விட்டது; ஓடைகள் உருமாறி விட்டன; குளங்கள், கோடுகள் போட்ட நிலங்களாகிவிட்டன; நம் ஊர் சாக்கடைகளில் மட்டும் தான் இன்னும் ஈரம் இருக்கிறது.
கருப்பாய் அதில் பாயும் கழிவுநீர் குடிப்பதற்கல்ல; பார்க்கவே பயமுறுத்துகிறது. அதே தண்ணீர் தான் குளங்களிலும் குவிந்து நிற்கிறது; அத்தனையும் நாம் செய்த அழுக்குகளும், கழிவுகளும் தான். தெரு நாய்களுக்கும், பறவைகளுக்கும் உணவும் கூட, எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது; குடிப்பதற்கேற்ற தண்ணீர் கிடைப்பது தான், அரிதான ஒன்றாகிவிட்டது. ஐந்தறிவு உயிர்கள் எங்கு தான் தாகம் தீர்த்துக் கொள்ளும்...அவற்றுக்குத் தாகம் தீர்ப்பது நம்முடைய கடமை.
நம் வீடுகளின் மாடிகளில், முற்றங்களில், நிழல் உள்ள சாரங்களில் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கலாம். வீதிகளில் திரியும் மாடுகள், குதிரைகள், மாடுகளுக்கு வீட்டு வாசல்களில் தண்ணீர் வைக்கலாம். கண்டிப்பாய் வைக்க வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு, நமது நாளிதழில் விடப்பட்ட இந்த கோரிக்கையை ஏற்று, கோவையில் பலரும் ஐந்தறிவு ஜீவன்களுக்குத் தாகம் தணிக்க முயற்சி எடுத்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் வாயில்லா அந்த ஜீவன்களின் சார்பில் கோடி நன்றிகள்...இந்த உயிர்களின் தாகம் தணிக்கும் அன்பில் மேகங்கள் குளிர்ந்து மழையாய்ப் பெய்யட்டும்... மண்ணை நனைக்கும் அந்த மழைத்துளியில் மனிதமும் இன்னும் அதிகமாய் செழிக்கட்டும்!
-நமது நிருபர்-

