காங்கிரசை அச்சுறுத்தும் 'ஆர்' எழுத்து; வேறு வழியின்றி பிரியங்காவுக்கு 'ஓகே'
காங்கிரசை அச்சுறுத்தும் 'ஆர்' எழுத்து; வேறு வழியின்றி பிரியங்காவுக்கு 'ஓகே'
ADDED : ஏப் 04, 2024 04:31 AM

சிக்கோடி லோக்சபா தொகுதிக்கும், 'ஆர்' எழுத்துக்கும் தொடர்புள்ளது. இம்முறை லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சிக்கோடி வரலாறு முன்னிலைக்கு வந்துள்ளது.
பெலகாவியின், சிக்கோடி லோக்சபா தொகுதி, ஒரு காலத்தில் காங்கிரசின் பாதுகாப்பு கோட்டையாக இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு நெருக்கமான சங்கரானந்தா, இதே தொகுதியில் தொடர்ந்து ஏழு முறை எம்.பி.,யானார். மத்தியில் அமைச்சராகவும் இருந்தார். இத்தகைய செல்வாக்கு மிக்க தலைவரை, 'ஆர்' என்ற எழுத்தில் பெயர் துவங்கும் பெண் ஒருவர் தோற்கடித்தார்.
ஜனதா தளம்
சிக்கோடி லோக்சபா தொகுதியில், 1967ல் முதன் முறையாக களமிறங்கிய சங்கரானந்தா வெற்றி பெற்றார். அதன்பின் அடுத்தடுத்த தேர்தல்களில், வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றிக் கனியை பறித்தார். மத்தியில் அமைச்சராகவும் இருந்தார். இவரை தோற்கடிக்க ஜனதாதளம் முயற்சித்தும் முடியவில்லை.
கர்நாடகாவில், ஜனதா தளத்தை சேர்ந்த, அன்றைய முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, தேவகவுடா போன்ற தலைவர்கள், 1996 லோக்சபா தேர்தலில், சங்கரானந்தாவை தோற்கடிக்க என்ன செய்வது என, ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டனர். ஜோதிடரும் கன்னடத்தில், 'ரா', ஆங்கிலத்தில் 'ஆர்' என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்ட பெண்ணை, தேர்தலில் களமிறக்கும்படி ஆலோசனை கூறினார்.
இந்த பெயர் கொண்ட பெண் வேட்பாளரை தேடி கண்டுபிடிக்கும் பொறுப்பை, நிப்பானி தொகுதியின் அன்றைய ஜனதா தளம் எம்.எல்.ஏ., சுபாஷ் ஜோஷி ஏற்றுக்கொண்டார். இவரும் கட்சியில் சிறப்பாக பணியாற்றிய வக்கீல் ரத்னமாலா சவனுாராவை சிபாரிசு செய்தார்.
இவர் 1996ல் ஜனதா தளம் சார்பில் களமிறங்கி, 1.12 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், சங்கரானந்தாவை தோற்கடித்து, ஜோதிடத்தை நிஜமாக்கினார்.
முற்றுப்புள்ளி
ரத்னமாலா சவனுாரின் வெற்றி, காங்கிரசின் சங்கரானந்தாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், ரத்னமாலா அமைச்சராக இருந்தார். ஆனாலும், 1998 லோக்சபா தேர்தலில், இவருக்கு சீட் கிடைக்கவில்லை.
'ஆர்' எழுத்தில் துவங்கும் பெயர் கொண்ட வேட்பாளர்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளது. விஜயபுரா லோக்சபா தொகுதியில், ரமேஷ் ஜிகஜினகி, 1998 முதல் 2009 வரை தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார்.
இம்முறையும் களத்தில் நிற்கிறார். சிக்கோடியில் 2009ல் ரமேஷ் கட்டி வெற்றி பெற்றார்; 2014ல் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.
'ஆர்' என்ற எழுத்தில் பெயர் துவங்கும் வேட்பாளர்களிடம், காங்., வேட்பாளர் தோற்றதால், அந்த எழுத்தை கேட்டாலே காங்கிரசுக்கு அலர்ஜி.
இம்முறை லோக்சபா தேர்தலில், சிக்கோடி தொகுதியில் ரமேஷ் கட்டிக்கு பா.ஜ., சீட் கை நழுவியதால், இவரை வளைத்து போட்டு வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.
'ஆர்' என்ற எழுத்தில் பெயர் துவங்கும் தலைவர்கள் யாராவது உள்ளனரா என வலை வீசி தேடினர். யாரும் சிக்காததால் வேறு வழியின்றி, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்காவுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர்.
- நமது நிருபர் -

