ADDED : ஆக 04, 2024 01:10 AM

புதுடில்லி: பா.ஜ., -- காங்., ஆகிய இரண்டு கட்சிகளும், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும் போது, ஒவ்வொரு வாரமும் அனைத்து எம்.பி.,க்களையும் அழைத்து, பார்லிமென்ட் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும்; இதை பார்லிமென்ட் கமிட்டி கூட்டம் என்பர்.
பா.ஜ., பார்லிமென்ட் கமிட்டி கூட்டத்தில் பிரதமரும், காங்., கூட்டத்தில், கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவரான சோனியாவும் பேசுவர். சமீபத்தில் நடைபெற்ற காங்., கூட்டத்தில் பேசிய சோனியா, 'நடக்கவிருக்கும் மஹாராஷ்டிரா உட்பட சில மாநில சட்டசபை தேர்தல்களில் நம் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; பா.ஜ.,வின் சரிவு ஆரம்பித்து விட்டது' என பேச, எம்.பி.,க்கள் மேஜைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்; சோனியாவிற்கோ ஏகப்பட்ட சந்தோஷம்.
இதைத் தொடர்ந்து, 'நேஷனல் ஹெரால்ட் சம்பந்தப்பட்ட வழக்கில் நம் கட்சி எந்தவித தவறும் செய்யவில்லை. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை வைத்து, எங்களை மிரட்டப் பார்க்கிறார் மோடி; இதெற்கெல்லாம் அஞ்ச மாட்டோம்' என, கோபமாக பேசினாராம் சோனியா. உடனே, அம்மாவின் பக்கத்தில் சென்று அவரை தட்டிக் கொடுத்து,'கோபப்பட வேண்டாம்; அமைதியாக இருங்கள்' என கூறினாராம் ராகுல். இதைப் பார்த்து நெகிழ்ந்து போயினர், காங்., - எம்.பி.,க்கள்.
இதையடுத்து தான், 'அமலாக்கத்துறை என் வீட்டை ரெய்டு செய்யப் போகின்றனர்; அதற்காக, அவர்களுக்கு டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்' என, ராகுல் கூறியிருக்கிறார்.