60ஐ தாண்டிய தலைகளுக்கு கல்தா காங்.,கில் இள ரத்தம் பாய்ச்சும் ராகுல்
60ஐ தாண்டிய தலைகளுக்கு கல்தா காங்.,கில் இள ரத்தம் பாய்ச்சும் ராகுல்
ADDED : செப் 07, 2024 04:06 AM

தமிழக காங்கிரசில், 60 வயதுக்கு மேல் உள்ள மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு, 50 வயதுக்குள் உள்ளவர்களை அந்த பதவிகளில் நியமிக்க, ராகுல் எம்.பி., உத்தரவிட்டுள்ள தவகல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் ஆட்சியை அமைக்க, கட்சியில் சீர்த்திருத்த நடவடிக்கைகளை, அக்கட்சி மேலிடம் மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் பதவிக்கு, 45 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட, 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து, ஏழு பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என, தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றங்களை செய்ய, டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
சமீபத்தில் டில்லியில், அகில இந்திய காங்., செயலர்கள் கூட்டம் நடந்தது. இதில், 'காங்கிரஸ் ஆட்சி அல்லாத மாநிலங்களில், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு வலிமையான மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படக் கூடிய, 3 நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நேர்காணல் நடத்த வேண்டும்.
'அதில், தேர்வாகும் தகுதியான நபருக்கு, மாவட்ட தலைவர் பதவி வழங்க பரிந்துரைக்க வேண்டும். குறிப்பாக, 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாவட்ட தலைவர் பதவி வழங்க வேண்டும். வட்டார தலைவர் பதவிக்கும், இந்த முறையை கொண்டு வர வேண்டும்' என, பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் பேசினார்.
எனவே, தமிழக காங்கிரசில், புதிய மேலிட பொறுப்பாளராக சூரஜ் ஹெக்டே நியமிக்கப்பட்டு உள்ளதால், அவர், ராகுல் உத்தரவின்படி, இளம் மாவட்ட தலைவர்களை நியமிக்க ஆலோசித்து வருகிறார்.
தற்போது, 74 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இரண்டு சட்டசபை தொகுதிக்கு, ஒரு மாவட்ட தலைவர் என, 117 மாவட்ட தலைவர்களை நியமிக்கப்பட உள்ளனர்.
அழகிரி தலைவராக இருந்தபோது, 40 பொதுச்செயலர்கள், 40 துணைத் தலைவர்கள், 116 மாநில செயலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், புதிய நிர்வாகிகள் பட்டியலில், குறைந்த எண்ணிக்கையில் மாநில நிர்வாகிகள் இடம் பெறவுள்ளனர்.
வடசென்னை மாவட்டத்தை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், செல்வப்பெருந்தகை பங்கேற்று, பட்டியல் தயாரித்துள்ளார்.
விரைவில், அவர் டில்லிக்கு சென்று புதிய மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பட்டியல் குறித்து மேலிட பொறுப்பாளர்களுடன் விவாதித்த பின் வெளியிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்-