காங்., அதிருப்தி கோஷ்டியினரை சந்திக்க ராகுல், கார்கே மறுப்பு
காங்., அதிருப்தி கோஷ்டியினரை சந்திக்க ராகுல், கார்கே மறுப்பு
ADDED : பிப் 24, 2025 02:10 AM

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, டில்லி சென்ற அதிருப்தி கோஷ்டிகளின் மாவட்டத் தலைவர்களை, பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோர் சந்திக்க மறுத்து விட்டனர். காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தரப்பில், புகைப்படம் எடுக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரசின் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், கிராம கமிட்டி சீரமைப்பு இயக்கத்தை செல்வப்பெருந்தகை கையில் எடுத்தார். முதற்கட்டமாக, மாவட்டத் தலைவர்கள் பதவிக்கு 5,000, மாநில நிர்வாக பொறுப்புக்கு 1,000 ரூபாய் செலுத்தி, ஆன்லைனில் விண்ணப்பிக்க உத்தரவிட்டார். இதற்கு சில மாவட்டத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சியின் முன்னாள் தலைவர் அழகிரி, எம்.பி.,யான மாணிக்கம் தாகூர், மயூரா ஜெயகுமார் ஆகியோரின், ஆதரவு மாவட்டத் தலைவர்கள், செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர்.
வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் திரவியம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் செங்கம் குமார், வேலுார் மாவட்டத் தலைவர் டீக்காராம், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட 15 மாவட்டத் தலைவர்கள் டில்லியில், மேலிடத் தலைவர்களை சந்தித்து முறையிட சென்றனர்.
தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடன்கரை சந்தித்து, செல்வப்பெருந்தகை மீது புகார் மனு அளித்தனர். அவர், 'நான் விரைவில் தமிழகம் வந்து, சத்தியமூர்த்தி பவன் வருகிறேன். அங்கு வைத்து பேசிக் கொள்ளலாம்; நன்றாக செயல்படுவோர் யாரையும் கட்சிப் பொறுப்பில் இருந்து மாற்ற மாட்டோம்' எனக் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, ராகுல், கார்கேவை சந்திக்க, செல்வபெருந்தகை மீதான அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் முயற்சித்துள்ளனர். அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவின் தலைவர் பிரவின் சக்கரவர்த்தியை, சந்தித்து பேசிய பின், பிரியங்காவை சந்திக்க அனுமதி கேடடுள்ளனர். அவர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளார். 'கட்சி விவகாரங்களை கார்கேவிடம் கூறுங்கள்' எனக் கூறி அனுப்பி விட்டார். எனவே, டில்லி சென்ற மாவட்டத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது
- நமது நிருபர் -.

