ராகுலின் அமெரிக்க பயணம்: திட்டத்தில் திடீர் மாற்றம்
ராகுலின் அமெரிக்க பயணம்: திட்டத்தில் திடீர் மாற்றம்
ADDED : ஆக 29, 2024 12:45 AM

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியிருப்பதால், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் அமெரிக்க பயணம் மாற்றப்பட்டுள்ளது.
செப்., 8ல் அமெரிக்கா சென்று, இரண்டு வாரங்கள் தங்கியிருக்க ராகுல் திட்டமிட்டு இருந்தார். அப்போது, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
குறிப்பாக, வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, சிகாகோ மற்றும் டல்லஸ் நகரங்களில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும், சில முக்கிய பல்கலைகளில் மாணவர்கள் மத்தியிலும் ராகுல் உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தான், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டி இருப்பதால், ராகுலின் அமெரிக்க பயணத்தில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் 10 - 12 நாட்கள் வரை திட்டமிடப்பட்ட அவரது பயணம் தற்போது 5 - 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், டெக்சாஸ் நகரில் நடக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் அவர் உரையாற்றுவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

