குரலை உயர்த்திய திரிணமுல் எம்.பி., டெரக் ஒ பிரையன்: ஜெய்ராம் ரமேஷ் சிரிப்பால் ராஜ்யசபா தலைவர் 'வெளிநடப்பு'
குரலை உயர்த்திய திரிணமுல் எம்.பி., டெரக் ஒ பிரையன்: ஜெய்ராம் ரமேஷ் சிரிப்பால் ராஜ்யசபா தலைவர் 'வெளிநடப்பு'
UPDATED : ஆக 09, 2024 01:53 AM
ADDED : ஆக 09, 2024 12:47 AM

ராஜ்யசபாவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. எதிர்க்கட்சியினர் தன்னை அவமதிப்பதாகக் கூறி, சபை தலைவர் ஜக்தீப் தன்கரும் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் நேற்று அலுவல்கள் துவங்கியதும், ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, ''ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
''போட்டியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்; இது எப்படி நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார்; பின்னணியில் என்ன நடந்தது? இதுகுறித்து மத்திய அரசின் விளக்கம் என்ன'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், இது குறித்து பேசுவதற்கு அனுமதி மறுத்தார். இதனால் பிரச்னை வெடித்தது. எதிர்க்கட்சி எம்.பி.,கள் ஆவேசம் அடைந்தனர்.
அருவருப்பு
சபை தலைவர் ஜக்தீப் தன்கரை நோக்கி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரக் ஒ பிரையன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்; உரத்த குரலில் சபையே அதிரும் வகையில் கேள்வி எழுப்பினார்.
இதைப் பார்த்து கோபமடைந்த ஜக்தீப் தன்கர், ''மிஸ்டர் டெரக் ஒ பிரையன்... உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு. சபை தலைவரை நோக்கி சத்தம் போடும் உங்களுடைய நடத்தை மிகவும் அருவருப்பாக உள்ளது.
''உங்கள் நடத்தையை கண்டிக்கிறேன். இன்னொரு முறை இப்படி செய்தால் உங்களை சபையில் இருந்து வெளியேற்றி விடுவேன். உங்களுடைய செயலை ஏற்க முடியாது,'' என உரத்த குரலில் கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, ஜக்தீப் தன்கர் பேசுகையில், ''நெருக்கடி நிலை பிரகடனம், இந்த நாட்டில் இருந்தபோது தான், ஜனநாயகத்தின் கறுப்பு பக்கங்களை நாம் பார்க்க நேர்ந்தது.
''இப்போது மீண்டும் அவை ஆரம்பமாகிறதோ என்று தோன்றுகிறது. பார்லிமென்ட் எனப்படும் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பை நோக்கி சவால் விடுகின்றனர்.
''வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, இவர்களுக்கு மட்டுமா வேதனை அளிக்கிறது.
''இவர்களுடைய இதயம் மட்டும் தான் கசிந்து கொண்டிருக்கிறதா? அந்த பெண்ணுக்காக ஜனாதிபதி, பிரதமர், நான் உட்பட நாட்டில் உள்ள அனைவருமே மிகுந்த வேதனையில் இருக்கிறோம்.
''இந்த விஷயத்தை அரசியலாக்கக் கூடாது; அப்படி செய்தால், அந்த பெண்ணுக்கு நாம் அவமரியாதை செய்வதாக அர்த்தம். உண்மையில் அவருக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும்.
''நான் சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கிறேன் என்றால், அது ஒருவருக்கு அளிப்பதாக அர்த்தமில்லை. பல கோடி பேர் அதை பார்க்கின்றனர் என்பதை நினைவில் வையுங்கள்,'' என்றார்.
இதன்பின் பேசிய சபை முன்னவர் ஜே.பி.நட்டா, ''எதிர்க்கட்சிகள் இது போன்ற விஷயங்களில் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. சபை தலைவரை நோக்கி சத்தம் போட்டு பேசுவதும், அவமரியாதையாக நடந்து கொள்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.
''எதிர்க்கட்சிகளுக்கு கையில் எந்த ஒரு உருப்படியான விஷயமும் இல்லை. அதனால் தான் அவர்கள் இது போன்ற விஷயங்களில் அரசியல் செய்ய ஆசைப்படுகின்றனர்,'' என்றார்.
அப்போது வெளிநடப்பு முடிந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பலரும் உள்ளே வரத்துவங்கினர்.
சத்தம் போடாதீர்கள்
திரிணமுல் எம்.பி., டெரக் ஒ பிரையன், மீண்டும் ஏதோ பேச முயற்சிக்க, அவரை அமரச் சொன்ன ஜக்தீப் தன்கர், ''இந்த சபைக்கு என்று கண்ணியம் இருக்கிறது. இது போன்ற முக்கிய விஷயங்களில்கூட சபையை விட்டு வெளிநடப்பு செய்தது, சபை தலைவரை நோகடிப்பது போல இருக்கிறது,'' என்றார்.
அப்போது, காங்கிரஸ் - எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் சிரிக்கவே, அவரை ஜக்தீப் தன்கர் எச்சரித்தபடி, ''மிஸ்டர் ஜெய்ராம்... என்னை பார்த்து சிரிக்காதீர்கள்; சத்தம் போடாதீர்கள். எனக்கு தெரியும்; அது உங்களுடைய சுபாவம்,'' என்று கூறிவிட்டு தொடர்ந்து பேசியதாவது:
இந்த சபை தலைவர் இருக்கையில் அமர்வதற்கு நான் பொருத்தமில்லாதவன் என்று எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கருதுகின்றனர். அவர்களுடைய ஆதரவை சபைக்குள் என்னால் பெற முடியவில்லை என்பதை உணர்கிறேன்.
அவர்களுடைய ஆதரவை பெறும் வகையில் நான் இந்த இருக்கையில் அமர்ந்து சபையை நடத்துவது ஏற்புடையதல்ல என்று நினைப்பதால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.
''நான் தகுதியற்றவன் என்று கருதி கிளம்புகிறேன்,'' என்று கூறி, இரு கைகளாலும் சபையை நோக்கி கும்பிட்டபடி இருக்கையிலிருந்து எழுந்தவர், அப்படியே திரும்பி உள்ளே தன் சேம்பருக்குள் சென்றுவிட்டார்.
இதையடுத்து, உடனடியாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் வந்து இருக்கையில் அமர்ந்து அலுவல்களை தொடர்ந்தார். சபை தலைவரே ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- நமது டில்லி நிருபர் -.