தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்காததால் பா.ஜ.,வுக்கு தலைவலியான தலைவர்
தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்காததால் பா.ஜ.,வுக்கு தலைவலியான தலைவர்
ADDED : மார் 24, 2024 01:25 AM

ராஜஸ்தானில் சுரு லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிட, பா.ஜ., வாய்ப்பு வழங்காததால், எம்.பி., மற்றும் கட்சி பதவியை ராஜினாமா செய்த ராகுல் கஸ்வான், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்காத விரக்தி மற்றும் அதிருப்தியால், மாற்றுக் கட்சிகளில் இணைந்து வரும் நிகழ்வு நாடு முழுதும் அரங்கேறி வருகிறது.
அரசியல் குடும்பம்
முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், சுரு லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தவர் ராகுல் கஸ்வான், 47; அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
ராகுல் கஸ்வானின் தாய் கமலா, 1998 மற்றும் 2008ல், சதுல்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்துள்ளார்.
இவரது தந்தை ராம் சிங் கஸ்வான், சுரு எம்.பி.,யாக பா.ஜ., சார்பில் நான்கு முறை பதவி வகித்துள்ளார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் சுரு தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்ட ராகுல் பஸ்வான், வரலாற்று வெற்றியாக மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். 2019ல் நடந்த தேர்தலிலும் இத்தொகுதியில் இவரே வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தலில் சுரு தொகுதியில் மீண்டும் போட்டியிட, ராகுல் கஸ்வானுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இவருக்கு பதில், பாராலிம்பிக் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு, பா.ஜ., மேலிடம் சீட் வழங்கியது.
இதனால் அதிருப்தி அடைந்த ராகுல் கஸ்வான், எம்.பி., மற்றும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்து, எதிர்க்கட்சியான காங்கிரசில் இணைந்தார்.
காங்கிரசில் இருந்து பல்வேறு நிர்வாகிகள், பா.ஜ.,வுக்கு தாவி வரும் நிலையில், ராகுல் கஸ்வானின் வரவு, காங்கிரசுக்கு சற்று ஆறுதலை வழங்கி உள்ளது.
தான் இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரு தொகுதியில், காங்., சார்பில் ராகுல் கஸ்வான் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
சுரு தொகுதியில் கஸ்வான் குடும்பம் மிகவும் செல்வாக்குமிக்கது. கடந்த 30 ஆண்டுகளாக, இங்கு இந்த குடும்பத்தை நம்பியே பா.ஜ., இருந்தது.
குற்றச்சாட்டு
தற்போது, பா.ஜ.,வுக்கு எதிராக ராகுல் கஸ்வான் நிறுத்தப்பட்டு உள்ளது, அக்கட்சித் தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், சுருவில் உள்ள எட்டு தொகுதிகளில், இரண்டில் மட்டுமே பா.ஜ., வென்றது. ஐந்தில் காங்., வெற்றி பெற்ற நிலையில், ஒன்றில் பகுஜன் சமாஜ் வென்றது.
சுரு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக ஏழு முறை பதவி வகித்த ராஜேந்திர சிங் ரத்தோர், கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். தன் தோல்விக்கு, ராகுல் கஸ்வான் தான் காரணம் என அவர் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது
- நமது சிறப்பு நிருபர் -.

