கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அருங்காட்சியகம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அருங்காட்சியகம்
ADDED : ஆக 18, 2024 01:11 AM

சென்னை: அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில்,
ராஜேந்திர சோழனின் வரலாற்றை உணர்த்தும் அருங்காட்சியகம் அமைக்கும் பணியில்,
தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
வணிகத் தொடர்பு
சோழர்கள்,
காவிரிப்பூம்பட்டினம், உறையூர், பழையாறை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களை
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். ராஜராஜ சோழனுக்குப் பின், அவரின் மகன்
ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்தார்.
அவர், விவசாய பூமியான
தஞ்சையில் படைகளை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், அரியலுார்
மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு தலைநகரை மாற்றினார்.
அங்கு நீர்ப்பாசனத்துக்கு, சோழகங்கம் என்ற ஏரியை வெட்டினார். தஞ்சை பெரிய கோவிலை போல சிவன் கோவிலையும் அங்கு கட்டினார்.
மாளிகைமேட்டில் கட்டிய மிகப்பெரிய அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தார்.
ராஜராஜனின்
படைத்தளபதியாகவும், இளவரசராகவும் பல காலம் இருந்த இவர், கடல்பயணம், கப்பல்
கட்டும் தொழில்நுட்பம், கடல் வாணிகத்திலும் சிறந்தவராக இருந்தார். இவர்,
மேற்கு, கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகத் தொடர்பிலும் இருந்தார்.
இவரின் அரண்மனை இருந்த மாளிகைமேடு பகுதியில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு செய்யப்பட்டது.
அதில்
கிடைத்த தொல்பொருட்கள், ஏற்கனவே ராஜேந்திர சோழன் ஆட்சியைப் பற்றி கிடைத்த
கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்டவற்றையும் சேகரித்து, அவரின் வரலாற்றை
விளக்கும் வகையில், அங்கு உலகத் தரமான அருங்காட்சியகம் அமைக்கும் பணி
நடக்கிறது.
இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முதல்வர்
ஸ்டாலின், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், தமிழக
வரலாற்றை உணர்த்தும் சான்றுகளை, உலகத்தரமான அருங்காட்சியகங்கள் அமைத்து
காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி,
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தை வெளிப்படுத்தும்
பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதேபோல், ஏற்கனவே
அகழாய்வு செய்யப்பட்டுள்ள அழகன்குளம், கொடுமணலிலும் அருங்காட்சியகங்கள்
அமைக்கப்பட உள்ளன.
அரசு விழா
கங்கைகொண்ட
சோழபுரம் கோவில், மத்திய தொல்லியல் துறையிடம் உள்ளது. மேலும், அது உலக
பாரம்பரிய சின்னமாகவும் உள்ளது. அதனால், அதன் அருகில் அருங்காட்சியகம்
அமைப்பதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
அவற்றுக்கு உட்பட்டு,
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் வாங்கப்பட்டுள்ளது. அங்கு, கீழடியில்
உள்ளதை போன்ற மிகச்சிறந்த அருங்காட்சியகம், விரைவில் அமைக்கப்படும்.
அதற்கான பணிகள் நடக்கின்றன.
மேலும், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரையன்று, இனி ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.