தொல்லியல் துறையினர் வசமிருந்தும் பராமரிப்பில்லாத ரஞ்சன்குடிக்கோட்டை
தொல்லியல் துறையினர் வசமிருந்தும் பராமரிப்பில்லாத ரஞ்சன்குடிக்கோட்டை
UPDATED : ஜூன் 03, 2024 04:57 AM
ADDED : ஜூன் 02, 2024 11:19 PM

பெரம்பலுார் : 'செடி, கொடி, மரக்கன்றுகளால் விரிசல் ஏற்படும் ரஞ்சன்குடிக்கோட்டையை பாதுகாக்க, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், மங்கலமேடு கிராமத்தில், ரஞ்சன்குடிக்கோட்டை கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறது. இக்கோட்டை, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் வரலாறு இதுவரை கண்டறியப்படவில்லை. ஜாகீர்தாரர்கள் இக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததும், சந்தாசாகிப் என்ற மன்னன் இங்கு ஆட்சி செய்ததற்கான தகவல்கள் உள்ளன.
44 ஏக்கர்
கோட்டையின் வெளிப்புற சுவர்கள், வேலுார் கோட்டை போல காணப்படுகின்றன. மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோட்டையை சுற்றி, பகை நாட்டினர் ஊடுருவாமல் இருக்க, அகலமான அகழி அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 44 ஏக்கரில் அமைந்துள்ள கோட்டையின் மேல்புறத்தோற்றம் செஞ்சிக்கோட்டையை போல கம்பீரமாக உள்ளது. மதில் சுவரின் நான்கு புறங்களிலும் இடையிடையே பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுவர்களில் மீன் சின்னங்களும், போர் வாள்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள வழிபாட்டு மண்டப துாண்களில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற ஓவியங்கள், வெவ்வேறு விதமான கலை சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கோட்டையின் மேல்புறத்தில், ராணியின் அந்தப்புரத்தை ஒட்டி நீச்சல் குளம் உள்ளது.
மேற்புறக்கோட்டையில் ஆயுதக்கிடங்கு, போர்க் காலங்களில் தப்பிச் செல்ல சுரங்கப்பாதை போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் உட்புறம் முஸ்லிம்களின் மசூதி ஒன்றும், அதன் அருகிலேயே சிவன், விநாயகர் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களின் சிலைகளும் உள்ளன.
![]() |
கோட்டையிலிருந்து ஏராளமான பழங்கால நாணயங்களும், பீரங்கி குண்டுகளும் அக்கால மன்னர்களின் பயன்பாட்டு பொருட்களும் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
பழம் பெருமை வாய்ந்த இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் மத்திய, மாநில அரசுகள் இந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த அக்கறை கொள்ளவில்லை.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வரலாற்று பொக்கிஷமாக விளங்கும் இக்கோட்டையின் கற்சுவர்களின் மதில்சுவர்கள், கோட்டை கொத்தளம் ஆகியவற்றில் தற்போது, செடி, கொடிகள் மரக்கன்றுகள், முள் மரங்கள் முளைத்துள்ளன.
சீரமைக்க கோரிக்கை
கடந்த 2021ம் ஆண்டில் கோட்டையில் தெற்கு புறத்தில் உள்ள கொத்தளம் பகுதி சரிந்து விழுந்தது. அது பின் சரி செய்யப்பட்டது. இப்போது, செடிகளின் வேர்கள் கல் அடுக்குகளின் வரிசையில் விரிசலை ஏற்படுத்தி பின்னர் பெருமழையில் சரிகின்ற நிலையை ஏற்படுத்திவிடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செடி, கொடி, மரக்கன்றுகளை வேரோடு அகற்ற வேண்டும். நவீன தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி சுவர்களை வலுப்படுத்த வேண்டும்.
பல்வேறு இடங்களில் சுண்ணாம்பு காரை பெயர்ந்து உள்ளது. அவற்றையும் சீரமைக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.