ADDED : செப் 16, 2024 01:54 AM

மும்பை:எதிர்கால பண தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாணய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை சீரமைக்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் அதன் நாணய மேலாண்மை உள்கட்டமைப்பை முழுமையாக புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. முக்கியமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் எதிர்கால பண தேவைகளை பூர்த்தி செய்ய, போதுமான சேமிப்பு மற்றும் கையாளும் திறனை உறுதிசெய்யும் வகையில் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், புதிய நாணய மேலாண்மை மையங்களை உருவாக்குதல், கிடங்குகளுக்கான ஆட்டோமேஷன் அறிமுகம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுதல், சரக்கு மேலாண்மை அமைப்பு மற்றும் ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டளை மையம் உள்ளிட்டவை, உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலில் தற்போது முன்வைக்கப்பட்டுஉள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கிக்கு, நான்கு முதல் ஐந்து ஆண்டு களாகும் என கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் வளர்ச்சி விகிதம் மிதமானதாக இருப்பினும், அடுத்த 10 ஆண்டு களில் அதன் வேகம் மெதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், எதிர்காலத்தில் வளர்ச்சி நேர்மறையானதாக இருக்கும் என பகுப்பாய்வுகள் தெரிவிப்பதாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

