அண்ணாமலை வருவதற்குள் அ.தி.மு.க.,வுடன் சமரசம்: வாசனை துாதராக்கி தமிழக பா.ஜ., முயற்சி
அண்ணாமலை வருவதற்குள் அ.தி.மு.க.,வுடன் சமரசம்: வாசனை துாதராக்கி தமிழக பா.ஜ., முயற்சி
ADDED : செப் 06, 2024 03:49 AM

தமிழகத்தில், கடந்தாண்டு செப்டம்பர் வரை, பா.ஜ.,வோடு இணக்கமான கூட்டணி கட்சியாகத்தான் அ.தி.மு.க., இருந்தது. அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா குறித்து, அண்ணாமலை பகிரங்கமாக விமர்சித்ததால், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கொந்தளித்தார்.
'அண்ணாமலையை தமிழக பா.ஜ., தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்; அப்போதுதான் கூட்டணி தொடரும்' என, மத்திய பா.ஜ.,வுக்கு கெடு விதித்தார். இதை பா.ஜ., தலைமை ரசிக்கவில்லை. இருந்தபோதும், இரு கட்சி தலைவர்களையும் அழைத்த அமித் ஷா, டில்லியில் சமரச பேச்சு நடத்தினார். ஆனாலும், அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி என அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்தது, கூட்டணி முறிவுக்கு வழி வகுத்தது.
அதன்பின், இரு கட்சியினரும் தங்கள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்தனர்; தோல்வி தான் கிடைத்தது; தி.மு.க., 39 தொகுதிகளையும் அள்ளியது. அ.தி.மு.க.,வுக்கு பல இடங்களில் மூன்றாம் இடமும், சில இடங்களில் நான்காம் இடமும் கிடைத்தது; பல தொகுதிகளில் டிபாசிட் பறிபோனது.
இந்நிலையிலும், 2026 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமைக்க, தமிழக பா.ஜ., மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அண்ணாமலைக்கு துளியும் விருப்பமில்லை. இதனால் அமைதியாக இருந்த கட்சி மூத்த நிர்வாகிகள், வாய்ப்பு வரும் என காத்திருந்தனர். தற்போது, அதற்கான பணிகளை துவக்கிஉள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
படிப்புக்காக அண்ணாமலை ஆக., 28ல் லண்டன் சென்றார். அவர் இல்லாத இந்த சூழலை பயன்படுத்தி, மீண்டும் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பை உருவாக்க, பா.ஜ., மூத்த தலைவர்கள் களமிறங்கி உள்ளனர். இதற்காக, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனை துாதராக்கி உள்ளனர்.
அதன்படி, கடந்த 3ம் தேதி, வாசன் டில்லிக்கு சென்று, அமித் ஷாவை சந்தித்தார். கடந்த சட்டசபை தேர்தல், 2024ல் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த புள்ளி விபரங்களை பட்டியலாக ஒப்படைத்தார்.
ஏற்கனவே, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை பங்கு போட, அ.தி.மு.க., -- பா.ஜ., என, இரு கூட்டணிகள் தவிர்த்து, நாம் தமிழர் கட்சியும் இருப்பதாலேயே கடந்த லோக்சபா தேர்தலில் மூன்று கூட்டணிகளும் தோல்வியை தழுவின.
தற்போது, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் வந்துள்ளது. ஆக, நான்கு கூட்டணிகள் தி.மு.க.,வுக்கு எதிராக போட்டியிடும்பட்சத்தில், அக்கட்சியே மீண்டும் மிக எளிதாக வெற்றி பெறும். அதனால் தான், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அவசியம் வேண்டும் என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை அமித் ஷாவிடம் பேசியுள்ளார்.
முன்னதாக இதே மாதிரியான கருத்துக்களை வலியுறுத்தியே, பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜாவும் அமித் ஷாவிடம் பேசியுள்ளார். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமரிடம் பேசி, நல்ல முடிவெடுக்கலாம் என சொல்லி, இருவரையும் அனுப்பி உள்ளார்.
இதையடுத்தே, அ.தி.மு.க., கூட்டணி மற்றும் பழனிசாமி குறித்து, ஹெச்.ராஜாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, பழனிசாமி பழகுவதற்கு இனிய தலைவர் என கூறியுள்ளார்.
அண்ணாமலை தவிர்த்து, தமிழக பா.ஜ.,வின் பெரும்பாலான மூத்த தலைவர்கள், அ.தி.மு.க.,வோடு கூட்டணியை விரும்புவதால், அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்புவதற்குள், தேசிய தலைமையிடம் இருந்து, 'பாசிட்டிவ்' ஆன சிக்னலை பெற்றுவிட வேண்டும் என தீவிரமாக முயல்கின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான்
மேற்கு வங்கத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக, தமிழக கட்சிகள் வாய் திறக்காமல் மவுனமாக உள்ளன. தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இரண்டரை ஆண்டுகள் எம்.எல்.ஏ., பதவியில் இருந்த நிலையில், ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்த விஜயதரணி தனக்கு பதவி வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவருக்கு நிச்சயம் கட்சிப்பதவி வழங்க வேண்டும்; வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க.,வுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான்.
- நயினார் நாகேந்திரன், பா.ஜ., சட்டசபை குழு தலைவர்
- நமது நிருபர் -