லாப நோக்குடன் முளைக்கும் 'கேன் குடிநீர்': தயாரிப்பு நிறுவனங்களால் நோய் அபாயம்
லாப நோக்குடன் முளைக்கும் 'கேன் குடிநீர்': தயாரிப்பு நிறுவனங்களால் நோய் அபாயம்
UPDATED : மே 09, 2024 05:01 AM
ADDED : மே 09, 2024 04:11 AM

கோவை: குடிநீர் பற்றாக்குறையை சாதகமாக்கி லாப நோக்குடன் திடீரென முளைத்துவரும் 'கேன் குடிநீர்' தயாரிப்பு நிறுவனங்களால் பொது மக்களுக்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் 'கேன் குடிநீர்' என்று விற்கப்படும் 'மினரல் வாட்டர்' தற்போது அதிகம் விற்பனையாகிறது. கோவை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.
இவற்றுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் உரிமம் பெற்ற பிறகே, உணவு பாதுகாப்பு துறையிடம் பதிவு செய்து உரிமம் பெற முடியும்.
மேலும், இந்திய தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்(ஐ.எஸ்.ஐ.,), மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ், நிறுவன பதிவு என அனைத்தும் அவசியம். மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதை சாதகமாக்கிக் கொண்டு உரிமம் பெறாத கேன் குடிநீர் தயாரிப்பு கோவையில் அதிகரித்துள்ளது. 'மினரல் வாட்டர்' தயாரிப்பானது முறையான இயந்திரங்கள் வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.
அதாவது, சவ்வூடுபரவல் நுட்பத்தில் அசுத்தங்கள் அகற்றுதல், மணல் வடிகட்டுதல், கார்பன் வடிகட்டுதல், 'மைக்ரோ பில்டரேஷன்' என இறுதியாக குடிநீரானது கேன்களில் நிரப்பப்படுகிறது.
ஆனால், இதை எதுவுமே செய்யாது கணபதி, கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற முறையில் கேன்களில் அடைத்து குடிநீர் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
'மினரல் வாட்டர்' தயாரிப்பாளர்கள் சிலர் கூறுகையில்,''சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் முறைப்படி, ஒரு லிட்டர் தண்ணீரில், 600 மி.லி., மட்டுமே 'மினரல் வாட்டர்' பெறமுடியும்; 400 மி.லி., வெளியேறிவிடும்.
ஆனால், நேரடியாக குழாயில் இருந்து கேன்களில் தண்ணீர் நிரப்பி ரூ.50 வரை விற்கின்றனர்; பணமும் கொடுத்து நோய் பாதிப்புக்கு ஆளாவது அப்பாவி மக்கள்தான்' என்றனர்.
புகார் கொடுங்க!
மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில்,''உரிமம் பெற்ற கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல் சேகரித்து வருகிறோம். விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பாட்டில், கேன் குடிநீரில் 'சீல்' செய்யப்பட்ட மூடி, உற்பத்தி தேதி உள்ளிட்டவற்றை மக்கள் கவனிக்க வேண்டும். புகார்களை, 94440 42322 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.