ரேஷன் கடைகளில் மளிகை வாங்க நெருக்கடி: மாதம் ரூ.1 லட்சம் மதிப்பு பொருட்கள் சப்ளை
ரேஷன் கடைகளில் மளிகை வாங்க நெருக்கடி: மாதம் ரூ.1 லட்சம் மதிப்பு பொருட்கள் சப்ளை
UPDATED : மே 03, 2024 06:07 AM
ADDED : மே 03, 2024 01:37 AM

சென்னை: ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குமாறு கார்டுதாரர்களை, ரேஷன் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதற்காக மாதம், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழக ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இவை, கார்டுதாரர்களுக்கு குறிப்பிட்ட எடையில் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. எனவே, கடை வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க, ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவில் மளிகை, எண்ணெய், மசாலா மற்றும் மாவு வகைகள் போன்றவை விற்கப்படுகின்றன.
இவற்றை, கார்டுதாரர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப வாங்கலாம். ஆனால், கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், '200 ரூபாய்க்கு மளிகை பொருட்கைளை வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை வழங்கப்படும்' என்று ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர்; அந்த பொருட்கள் தரமாகவும் இல்லை; விலையும் அதிகமாக உள்ளன' என்றனர்.
இது குறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடை ஊழியர்களிடம், கட்டுப்பாடற்ற பொருட்களின் தேவை பட்டியலை பெற்று, அதற்கு ஏற்ப விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதை பின்பற்றுவதில்லை.
ஒரு கடையில் மாதம், 30,000 ரூபாய்க்கு கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனையாகின்றன என்றால், சென்னையில் உள்ள கடைகளுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும்; மற்ற மாவட்ட கடைகளுக்கு, 90,000 ரூபாய்க்கும் அதிகாரிகள் அனுப்புகின்றனர்.
பிரியாணி பேஸ்ட், இஞ்சி, பூண்டு விழுது என, இஷ்டத்திற்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றை யாரும் வாங்குவதில்லை. வெளிச்சந்தையை விட குறைந்த விலைக்கு தான் மளிகை பொருட்களை அனுப்ப வேண்டும்.
ஆனால், விலை அதிகம் இருப்பதால் பலர் வாங்குவதில்லை. அவற்றை விற்கவில்லை எனில், அதற்கு உரிய பணம் சம்பளத்தில் பிடிக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
இதனால், ஊழியர்களும், கார்டுதாரர்களிடம் கட்டாயப்படுத்தும் நிலை ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற பொருட்களை அனுப்பும் போது, ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, விற்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான், பொருட்களின் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்கும். அதை அதிகாரிகள் செய்வதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.