ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிக்கப்போகும் புள்ளிகள் யார்?
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிக்கப்போகும் புள்ளிகள் யார்?
ADDED : மே 07, 2024 04:10 AM

கடந்த ஏப்ரல், 4ல், சென்னை - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரசில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாயை தாம்பரம் போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர். பணத்தை எடுத்து சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்கள் நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனோடு தொடர்புடையவர்கள் என்பதால், பிடிபட்டது நயினார் நாகேந்திரனுக்காக கொடுத்து அனுப்பப்பட்ட பணம் தான் என்பதில், போலீசார் உறுதியாக உள்ளனர்.
சம்மன்
ஆனால், அந்தப் பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, நயினார் நாகேந்திரன் கூறிவிட்டதால், அவரை நோக்கி எப்படி விசாரணையை கொண்டு செல்வது என புரியாமல், துவக்கத்தில் தாம்பரம் போலீசார் தவித்தனர். தற்போது, வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சதீஷ், நவீன், பெருமாளிடம் விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களிடம் கிடைத்த விபரங்களை வைத்து, பா.ஜ., தொழில் பிரிவு மாநில தலைவர் கோவர்த்தனனை நோக்கி விசாரணையை கொண்டு செல்ல துவங்கியுள்ளனர். அவருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், அவரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ரயிலில் பணம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், என்ன நடந்தது என்பது குறித்த முழு விபரங்களை கோவர்த்தனன் கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., பிரிவு போலீசார் கூறியதாவது: முதலில் சதீஷிடம் விசாரித்தோம். அவர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் பணியாற்றிவர். அவர் இதுவரை திருநெல்வேலிக்கு சென்றதே இல்லை. பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் தான் அவருக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, பணத்தை கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளனர். சென்னைவாசியான அவர், துவக்கத்தில் தயங்கினார். வற்புறுத்திய பின், நவீன், பெருமாளுடன் பணத்தை எடுத்துச் சென்றதை ஒப்புக் கொண்டார்.
விசாரணை
முன்னதாக, இந்த விஷயத்தில் கோவர்த்தனனும், அவரது டிரைவரும் தான் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். டில்லியில் இருந்து வந்த 200 கோடி ரூபாயை, தேர்தல் செலவுக்காக தமிழகம் முழுதும் எடுத்துச் செல்லும் பொறுப்பு, கோவையை சேர்ந்த பா.ஜ., மாநில நிர்வாகியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னையில் இருக்கும் கோவர்த்தனனுக்கு சொந்தமான, கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தான் பணம் பிரித்து அனுப்பப்பட்டது. அந்த பணிகளை கோவர்த்தனின் டிரைவர் முன்னின்று கவனித்துள்ளார். நயினார் நாகேந்திரனுக்காக அனுப்பப்பட்ட 4 கோடி ரூபாய், கோவர்த்தனனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தான் எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன், கோவர்த்தனனின் டிரைவர், சென்னை யானைக்கவுனி, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் இருக்கும் சிலரிடம் ஒரு கோடி ரூபாயை வாங்கி, அதை டூ - வீலர் வாயிலாக எடுத்து வந்துள்ளார்.
அந்த பணத்தில் 35 லட்சம் ரூபாயை, சவுகார்பேட்டையில் இருக்கும் தனக்கு தெரிந்த மார்வாடி ஒருவரிடம் கொடுத்துள்ளார். அதாவது, 1 கோடி ரூபாய் வாங்கி வர கூறியதில், 65 லட்சம்ரூபாயை மட்டும், கோவர்த்தனனின் அடுக்கு மாடி குடியிருப்பு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதை கோவர்த்தனனின் டிரைவரும், சதீஷும் தங்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதற்காக, 'சிசிடிவி' கேமரா பதிவுகள், மொபைல் போன் அழைப்பு மற்றும் பேச்சு விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்களை காட்டிய பிறகு தான் கோவர்த்தனனின் டிரைவர் மற்றும் சதீஷ் நடந்த விஷயங்களை முழுமையாக தெரிவித்தனர். இதற்கு பிறகு அனைத்து மட்டங்களிலும், விசாரணை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்படுகிறது. கோவர்த்தனனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும். அதை வைத்து, கோவை பா.ஜ., புள்ளிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அவரையும் விசாரணைக்கு அழைப்போம். அதன் பிறகே நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு அழைக்கப்படுவார்.
போலி வேஷம் களையும்
ஆதாரங்களுடன் விசாரணை நடக்கையில், பணம் கொண்டு செல்லப்பட்டதன் பின்னணியை மறைக்க முடியாது. தேவையானால், ஒன்றுக்கு மேற்பட்ட முறை விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் வரவேண்டியிருக்கும். அவரிடம் விசாரித்து முடிக்கும் போது, கிடைக்கும் விபரங்களை வைத்து மேற்கொண்டும் சிலரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியிருக்கலாம்.
அப்படி முழுமையாக திரட்டப்படும் விபரங்களால், 200 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் முழுதும் வெளிச்சத்துக்கு வரும். பலரது போலி வேஷம் களையும். தி.மு.க., ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களே, இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அறிய ஆர்வம் காட்டுவதால், விசாரணை தீவிரமாக நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -