லாரியை மறித்து பணம் பறித்த ஆர்.டி.ஓ.,வின் டிரைவர், புரோக்கர் கைது
லாரியை மறித்து பணம் பறித்த ஆர்.டி.ஓ.,வின் டிரைவர், புரோக்கர் கைது
ADDED : மார் 09, 2025 07:09 AM

தஞ்சாவூர்: ஜல்லி ஏற்றி வந்த லாரியை மடக்கி, வட்டார போக்குவரத்து அலுவலர் என கூறி, மிரட்டி 16,500 ரூபாயை பறித்த, ஆர்.டி.ஓ.,வின் டிரைவர், புரோக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், இலுப்பப்பட்டு பகுதியை சேர்ந்த பாரதி லாரன்ஸ், 32. இவர் புதுக்கோட்டையில் இருந்து, நன்னிலத்திற்கு லாரியில், ஜல்லி ஏற்றிக் சென்று கொண்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரில் வந்த இருவர் லாரியை மறித்தனர். மேலும், லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ்சிடம், பர்மிட் எங்கே என்று கேட்டு, காரில் ஆர்.டி.ஓ., இருக்கிறார் என கூறினார்.
மேலும், அடையாள அட்டையை லாரி டிரைவரான பாரதி லாரன்ஸ் கேட்ட போது ஆத்திரமடைந்த நபர், பாரதி லாரன்ஸ் சட்டைப்பையில் வைத்திருந்த லைசென்ஸ், 16,500 ரூபாயை பறித்த காரில் தப்பினர்.
போலீசார் விசாரணையில், பாரதி லாரன்ஸ்சிடம் இருந்து பணத்தை பறித்தது, தஞ்சாவூர் ஆர்.டி.ஓ.,வின் கார் டிரைவராக பணியாற்றி வரும் விவேகானந்தன், 49, அவரது நண்பரும், புரோக்கருமான மாதவன், 39, என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, தமிழ் பல்கலை போலீசார் விவேகானந்தன், மாதவன் இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.