UPDATED : மே 09, 2024 07:04 AM
ADDED : மே 09, 2024 01:41 AM

சென்னை:ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிவிப்பை, அ.தி.மு.க.,வினர் யாரும் கண்டு கொள்ளாதது, அவரது ஆதரவாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அவர் தலைமையில் கட்சி லோக்சபா தேர்தலை சந்தித்துள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கி, அதன் பொதுச்செயலராக உள்ளார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை துவக்கி, பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
கட்சியினர் மூன்று பிரிவாக செயல்படும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்கப் போவதாக, அவ்வப்போது சசிகலா கூறி வருகிறார்.
லோக்சபா தேர்தலில், யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு, அ.தி.மு.க.,வினர் அனைவரும் விண்ணப்பப் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து, தனக்கு அனுப்பும்படி கூறினார்.
அந்தப் படிவத்தில், பெயர், முகவரி, தொலைபேசி எண், 'இ - மெயில்' முகவரி, ஆதார் எண், கட்சி அமைப்பு மாவட்டம், தாங்கள் சார்ந்திருக்கும் ஒன்றியம், சட்டசபை தொகுதி, கல்வித்தகுதி, வயது, வகுப்பு, கட்சியில் இணைந்த ஆண்டு, கடந்த 2017 ஜன.,1 கட்சியில் வகித்த பொறுப்பு, தற்போது இதர அமைப்பில் செயல்படுவதாக இருந்தால், அதன் பெயர், இதர அமைப்பில் தற்போது வகிக்கும் பொறுப்பு ஆகியவை கேட்கப்பட்டிருந்தன.
இப்படிவத்தை கட்சியினர் ஆர்வமுடன் பூர்த்தி செய்து அனுப்புவர் என்று, சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கட்சியினர் கண்டு கொள்ளவில்லை. இது அவர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சசிகலாவுக்கு கட்சியினர் மத்தியில், எந்த ஆதரவும் இல்லை. பிரிந்த கட்சியினரை ஒன்று சேர்க்கப் போவதாக, அவர் கூறி வருகிறார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.
பழனிசாமி தரப்பிலோ, பன்னீர்செல்வம் தரப்பிலோ பேசவில்லை. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அவரை சந்திக்க விரும்பிய போதும், அவர் சந்திக்கவில்லை. தினகரனுக்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
அவருக்கும் கட்சிக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது என, பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் யாரிடமும் பேசாமல், பெயருக்கு கட்சி தன்னிடம் வரும் எனக்கூறுவதை நம்ப கட்சியினர் தயாராக இல்லை.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தன் ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிக்கவில்லை. இவர் ஆதரவை பழனிசாமி தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்த பன்னீர்செல்வம் தரப்பினரையும் கண்டுகொள்ளவில்லை.
இதனால், அ.தி.மு.க., வினர், அ.ம.மு.க.,வினர், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என, அனைத்து தரப்பினரும் அவர் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே, அவர் கூறியபடி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய யாரும் முன்வரவில்லை. தற்போதைய நிலையில், சசிகலா பேச்சை யாரும் நம்பும் நிலையில் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.