எஸ்.இ.டி.சி., பஸ் முன்பதிவு சுறுசுறுப்பு இல்லாதது ஏன்?
எஸ்.இ.டி.சி., பஸ் முன்பதிவு சுறுசுறுப்பு இல்லாதது ஏன்?
UPDATED : ஆக 06, 2024 06:15 AM
ADDED : ஆக 05, 2024 11:58 PM

திருப்பூர்: அறிவிப்பு வெளியிடப்பட்டபோதும், குழு பயணங்களுக்கு அரசு விரைவுபோக்குவரத்து கழகமான எஸ்.இ.டி.சி., பஸ்களை பயணிகள் பயன்படுத்த முடிவதில்லை.
பயணிகள் குழுவாக விழாக்களில் பங்கேற்கச் செல்வதற்கும், பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளவதற்கும் ஒப்பந்த அடிப்படையில், குறைந்த கட்டணத்தில் சொகுசு பஸ்களைப் பயன்படுத்தலாம் என்று எஸ்.இ.டி.சி., அறிவித்திருந்தது.
ஆடி மாதம் துவங்கும் முன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டும், மாநில அளவில் சொற்ப அளவிலேயே முன்பதிவாகி உள்ளது.
விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் தான் பயணிகள் பஸ்களை எதிர்பார்க்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி தவிர்த்த பிற மாவட்டங்களில் குறைந்தளவு பஸ்களே உள்ளன.
குழுவாக பயணிப்போர் எதிர்பார்க்கும் நாட்களில் பஸ்கள் இருப்பதில்லை. ஒரு மாதத்திற்கு முன் முன்பதிவு செய்ய வந்தாலும், பயண நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் வருமாறு அதிகாரிகள் கூறுகின்றனர்.
'மாவட்டத்துக்கு ஒரு பஸ் அல்லது கோட்டத்துக்கு ஒரு புதிய பஸ் என ஒப்பந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பஸ்சை சிறப்பு முன்பதிவுக்கு மட்டும் ஒதுக்கி விட்டால், முன்பதிவு எளிதாகும்' என்கின்றனர் பயணிகள்.