சவுக்கு சங்கருக்கு உளவு சொன்ன உடன்பிறப்புகள்; தி.மு.க., தலைமை அதிர்ச்சி
சவுக்கு சங்கருக்கு உளவு சொன்ன உடன்பிறப்புகள்; தி.மு.க., தலைமை அதிர்ச்சி
ADDED : மே 13, 2024 03:42 AM

'யு டியூபர்' சவுக்கு சங்கருடன், தி.மு.க., தலைவர்களும் தொடர்பில் இருந்த விபரம் அறிந்து, அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்தபின், கட்சி தலைமை அதிரடி காட்டலாம் என்பதால், பலரும் பதற்றத்தில் உள்ளனர்.
பெண் போலீசாரை அவதுாறாக பேசியது, கிளாம்பாக்கம் பஸ் நிலைய விவகாரத்தில் போலியாக ஆவணங்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சோதனை
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, குண்டர் சட்டத்திலும் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், சென்னை தி.நகரில் இருக்கும் சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் பயன்படுத்திய லேப்டாப், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்றவற்றைக் கைப்பற்றினர்.
அவற்றின் வாயிலாக, அவர் யார் யாரை எல்லாம் தொடர்பு கொண்டிருந்தார்; என்னென்ன செய்திகள் பறிமாறப்பட்டன என்பது குறித்த தேடுதலில் போலீசார் இறங்கியுள்ளனர். அதில், கிடைத்து வரும் தகவல்கள், தி.மு.க., தலைமையை அதிர வைத்துள்ளன.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
துவக்கத்தில், அ.தி.மு.க., வினர் துாண்டுதலில் தான், தங்களுக்கு எதிராக சவுக்கு சங்கர் செயல்படுகிறார் என, தி.மு.க., தலைமை நினைத்தது.
காலப்போக்கில், தி.மு.க.,வில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பலரே, சவுக்கு சங்கருடன் தொடர்பில் இருக்கின்றனர்; அவர்கள்தான், அரசில் நடக்கும் பல்வேறு தவறுகளை, ஆவணங்களுடன் சவுக்கு சங்கருக்கு அனுப்புகின்றனர் என்ற தகவல் கட்சி தலைமைக்கு சென்றது.
சவுக்கு சங்கர் கைதானதும், யார் யார் அவருடன் தொடர்பில் இருந்தனர்; என்ன பேசினர் என்பது குறித்த விபரங்களை அறிக்கையாக தரும்படி, போலீசாருக்கு தி.மு.க., தலைமை உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தான், சவுக்கு சங்கர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதில், அ.தி.மு.க., தரப்பில் இருந்து தொடர்பு கொண்டவர்கள், விபரங்களை பரிமாறியவர்கள் என, பலருடைய விபரங்கள் கிடைத்துள்ளன. அத்துடன், தி.மு.க.,வில் இருக்கும் பலரும் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
பகிர்வு
குறிப்பாக, தி.மு.க., மூத்த தலைவர்களில் ஒருவர், கட்சியில் உதயநிதிக்கு முக்கியத்துவமும் கொடுத்தால், தன் அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்து எனக்கருதி, சவுக்கு சங்கரை தொடர்பு கொண்டு பல விஷயங்களை கூறியிருக்கிறார்; பல்வேறு ஆவணங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலரும், சவுக்கு சங்கருக்கு, 'சோர்ஸ்' ஆக இருந்துஉள்ளனர்.
கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் இருப்பவர்கள் இப்படி வரிந்து கட்டி செயல்பட்ட விபரம் கட்சி தலைமைக்கு தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின், கட்சியில் நடக்கும் அதிரடி மாற்றங்களில், சவுக்குக்கு தகவல் கொடுத்து வந்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம்; அவர்கள் ஓரங்கட்டப்படலாம்.
இந்த விபரங்கள் சற்று கசிந்து வருவதால், சவுக்கு சங்கரோடு தொடர்பில் இருந்த தி.மு.க., தலைவர்களும், அரசு அதிகாரிகளும் பதற்றத்தில் உள்ளனர்.
இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -